அதிமுகவை பின்பற்றும் காங்கிரஸ்... 10 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Jul 9, 2019, 2:20 PM IST
Highlights

கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அரசியல் சூடுபிடித்துள்ளது.

கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அரசியல் சூடுபிடித்துள்ளது. 

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திடீரென இருகட்சிகளை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதனால், மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக சூழ்நிலை குறித்து, பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரும் கலந்து கொள்ளவில்லை. 

இந்த கூட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி அரசை கவிழ்க்க 6-வது முறையாக மோடி, அமித்ஷா முயற்சி செய்கின்றனர். பிரதமர் மோடி உத்தரவுப்படி தான் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி நடைபெற்று வருகிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

மேலும் அவர் பேசுகையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக திரும்பி வந்து தங்களது ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் சட்டப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். சபாநாயகரை சந்தித்து ராஜினாமா செய்தவர்களை தகுதி நீக்கம் செய்ய உள்ளோம் கூறியிருந்தார். எதிர்காலத்தில் அமைச்சர் பதவிகள் வழங்கப்படாது எனவும் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்நிலையில், ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ராஜினாமா எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குவதுடன் 6 ஆண்டு போட்டியிட தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!