
பஞ்சாப்பின், லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியதாக, உதவிப் பேராசிரியை ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் குர்சங் ப்ரீத் கௌர் என்பவர் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் ராமர் குறித்துப் பேசிய ஆடியோ க்ளிப் ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் வெளியான அந்த ஆடியோவில், மனதளவில் ராவணன் நல்லவன். ஆனால், ராமன் நல்லவனில்லை என்று ஆசிரியர் கூறியுள்ளார்.
ராமனை ஒரு தந்திரக்காரனாக தான் பார்ப்பதாக அவர் அதில் பேசியுள்ளார். மேலும் ராமன், சீதையை ராணுவனனிடம் சிக்கவைக்க திட்டம் தீட்டி, இறுதியில் சீதையைச் சிக்கவைத்துவிட்டு எல்லாப் பழியையும் ராவணன் மீது போட்டுவிட்டாதாக கூறும் அந்த ஆசிரியர், இதில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்று நாம் எப்படி முடிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கிறார். இன்று ராமனை கடவுளாக பார்க்கிறார். இன்று உலகமே ராமனைத் தொழுதுவிட்டு, ராவணனைக் கெட்டவன் என்கிறது
ஆனால், ஒரு செயலை திட்டமிட்டுச் செய்த ராமன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்... ராமன் தந்திரமானவன்" எனப் பேராசிரியை குர்சங் ப்ரீத் கௌர் பேசியிருக்கிறார்.இந்த ஆடியோ சர்ச்சையானதையடுத்து இந்து கடவுள் ராமரைப் பற்றி அவதூறாகப் பேசியதாக உதவிப் பேராசிரியை குர்சங் ப்ரீத் கௌர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் குர்சங் ப்ரீத் கௌரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும், ``ராமரைப் பற்றிய உதவி பேராசிரியரின் பேச்சு, அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அதற்கும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள பல்கலைகழகம், நிர்வாகத்தின் நடத்தை விதிகளை மீறியதற்காக, குர்சங் ப்ரீத் கௌர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில், பேராசிரியை குர்சங் ப்ரீத் கௌர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று சில வாரங்களுக்கு முன் இந்து மத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்து கடவுள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாடமெடுத்த அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாடம் எடுத்து பேசிய உரையில், பாலியல் பலாத்காரத்திற்கு இந்துக்களின் கடவுளை உதாரணமாகக் காட்டியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக வகுப்பில் நடந்துகொண்டதாக கூறி மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க: சர்ச்சை..! பிரம்மா, விஷ்ணு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டனர்.. பாடமெடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..