
நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு தானியங்களுக்கு மத்தியஅரசு முழுமானியம் அளிக்கிறது, ஆனால், நல்ல பெயரை மாநில அரசுகள் பெற்றுக்கொள்கிறது. இனி மானியங்கள் விவரம் குறித்து மக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்க வேண்டும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மாநிலங்களை வலியுறுத்தியுள்ளார்.
மானிய விலை
புதுடெல்லியில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறுகையில், “ கோதுமை கிலோ 3 ரூபாய்க்கும், அரிசி கிலோ 2 ரூபாய்க்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், ரேஷன் கடைகளில் மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
எழுத வேண்டும்
ஆனால், துரதிருஷ்டவசமாக பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசு அளிக்கும் பெரும்பாலான மானியத்தை தாங்கள் அளிக்கிறோம் எனக்கூறி அந்த நல்ல பெயரை வாங்கிவிடுகின்றன. ஆதலால், மாநில அரசுகள் ரேஷன் கடைகளில் உணவு தானியங்களின் மானியங்கள் குறித்து தெளிவாக மக்கள் பார்க்கும் வகையில் எழுதி வைக்க வேண்டும்.
மாநிலங்கள் வழங்கவில்லை
கோதுமைக்கு ரூ.22, அரிசிக்கு ரூ.29.64காசுகளை மத்தியஅரசு மானியமாக வழங்கி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே உணவு தானியங்கள் இலவசமாக வழங்குகின்றன. பெரும்பாலான மாநிலங்கள் எதையும் தங்களின் கஜானாவில் இருந்து எடுத்துக் கொடுக்கவில்லை.
விழிப்புணர்வு அவசியம்
இந்த விஷயத்தில் மக்களுக்கு அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால், பீகார் மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் தங்களுக்கு 2, 3 ரூபாயில் கிடைக்கும் உணவு தானியங்கள் முதல்வர் நிதிஷ்குமார்தான் வழங்குகிறார் என நினைத்துக்கொண்டு இருக்கின்றன. மத்திய அரசு தான் இந்த மானியங்களை வழங்குகிறது என மக்களுக்கு தெரியாது. ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் கோடியை உணவு மானியமாக மத்திய அரசு வழங்குகிறது’’ எனத் தெரிவித்தார்.