
அடுத்த 15 ஆண்டுகளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கழிப்பறைகளுடன் கூடிய வீடுகள், டூ வீலர்அல்லது கார், மின்சாரம், குளிர்சாதனவசதி, டிஜிட்டல் இணைப்பு வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.
நிதி ஆயோக்
நிதி ஆயோக்கின் 3-வது நிர்வாகக் குழுக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நிதி ஆயோக்கின் துணைத் தலைவர்அரவிந்த் பனகாரியா இந்தியாவின் 2031-32ம் ஆண்டுக்கான கண்ணோட்டம், நிலைப்பாடு, செயல்திட்டம் ஆகியவை குறித்து பேசினார்.
வீடு, கார், மின்சாரம்
அப்போது அவர் கூறுகையில், “ 2031-32ம் ஆண்டில் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் கழிப்பறைகளுடன் கூடிய வீடுகள், இருசக்கர வாகனம் அல்லது கார், மின்சாரம், ஏ.சி. வசதி,டிஜிட்டல் இணைப்பு போன்றவை கிடைக்கும்.
சாலைகள், ரெயில்வே, நீர்வழிகள், விமானப் போக்குவரத்து நவீனமாயமாக்கப்படும். சுத்தமான இந்தியா உருவாக்கப்பட்டு மக்கள் அனைவரும் சுவாசிக்க தரமான காற்று, நீரும் அளிக்கப்படும்.
தனிநபர் வருவாய்
மக்களின் தனிநபர் வருவாய்2015-16ம் ஆண்டு ரூ.1.06 லட்சம் இருக்கிறது. இது 2031-32ம் ஆண்டு ரூ.3.14 லட்சமாக உயர்த்தப்படும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2015-16ம் ஆண்டில் ரூ.137 லட்சம் கோடியாக இருந்தது. இது 2031-32ம் ஆண்டில் ரூ.469 லட்சம் கோடியாக உயரும். அதேபோல மத்திய அரசும், மாநில அரசுகளின் செலவும் 2031-32ம் ஆண்டில் ரூ.130 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
இந்தியாவை செழுமையாக, ஆரோக்கியமாக, பாதுகாப்பாக, ஊழல் இல்லாமல், சுற்றுச்சூழலை சுத்தமாகவும், சக்தி மிகுந்த நாடாகவும் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.