“நான் எனது கடமையை செய்தற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்” - டிஐஜி ரூபா அதிரடி பேட்டி!

First Published Jul 29, 2017, 12:43 PM IST
Highlights
dig roopa says that she wont apology


பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக டிஜஜி ரூபா புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். 

இதற்கிடையில் டிஐஜி ரூபா, பெங்களூரு மாநகர சாலை பாதுகாப்பு பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு கமி‌ஷனராக மாற்றப்பட்டார். அவர் கொடுத்த புகாரில் தவறு இருப்பதாகவும், இதனால், நஷ்டஈடு வழங்க வேண்டும் என டிஜிபி சத்தியநாராயண ராவ் நோட்டீஸ் அனுப்பினார்.

இதுகுறித்து டிஐஜி ரூபா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து எனது 2 அறிக்கையில் விரிவாக கூறியுள்ளேன். சசிகலா தங்குவதற்காக தனி படுக்கை அறை, சமையல் செய்ய தனி சமையலறை உள்பட 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்இடி. டிவி, கட்டில், மெத்தை உள்பட சொகுசு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

சசிகலா தன்னை சந்திக்க வருபவர்களை சிறைவிதிக்கு மாறாக தனி அறை ஒன்றில் சந்தித்து வந்தார். சிறை வளாகத்தில் உள்ள பயன்படுத்தபடாத அறையை இதற்காக அலுவலகம் போலவே அமைத்துள்ளார். அந்த அலுவலகத்தில் சிசிடிவி கேமரா கிடையாது.

சசிகலாவை சந்தித்து சென்றவர்கள் விவரத்தோடு சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது அந்த காட்சிகளில் சசிகலா இல்லை. சசிகலா விதிமுறைகளை மீறியதற்கான வீடியோ ஆதாரங்கள் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் அளிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுடன், இளவரசியும் அதே அறையில் தங்கி இருந்ததால் அவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைத்துள்ளது. அவருக்கும் விதிமுறை மீறல்களில் பங்கு உள்ளது. எனது இந்த குற்றச்சாட்டுக்களை டிஜிபி சத்தியநாராயணராவ் வழக்கிறஞர் ஒப்புக்கொண்டுள்ளார். அனைவருக்கும் தெரிந்த ஒரு விதிமீறலை தான் நான் அம்பலப்படுத்தினேன்.

இந்த முறைக்கேட்டை ஒப்புக் கொள்ளும் நிலையில் டிஜிபி சத்தியநாராயணராவ் எதற்காக எனக்கு நோட்டீஸ் அனுப்பினார் என்று தெரியவில்லை. இதன் மூலம் சத்தியநாராயணராவ் யார் பக்கம் உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எனது கடமையை செய்தற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். டிஜிபி சத்திய நாராயணராவ் நோட்டீசை சட்டப்படி எதிர் கொள்வேன். இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!