
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாகிஸ்தான் பல இந்திய விமானநிலையங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை தாக்க முயன்றதாகவும், ஆனால் அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டன என்றும் கூறினார். இந்தியா சந்தித்த தாக்குதல்களையும் அதைத் தொடர்ந்து நடத்திய பதிலடித் தாக்குதல்களையும் விளக்கும் காட்சிகளுடன் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.
வீர மரணம் அடைந்த அஞ்சலி செலுத்திய காய், "அவர்களின் தியாகங்கள் எப்போதும் நினைவுகூரப்படும்" என்றார். "இதுவரை மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளோம், நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாகவும் அளவிடப்பட்டவையாகவும் உள்ளன. ஆனால், நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் தீர்க்கமாக எதிர்கொள்ளப்படும்" என்றார்.
ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்ட தாக்குதலாக ராணுவத்தின் பதில் இருந்தது. பயங்கரவாத முகாம்களைத் தாக்க ஒரு நுணுக்கமான எல்லை தாண்டிய நடவடிக்கை திட்டமிடப்பட்டது. பயங்கரவாத முகாம்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த முகாம்களில் சில கைவிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் அமைந்துள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கியது. இதில் பஹாவல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள முக்கிய மறைவிடங்களும் அடங்கும். அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற முரிட்கேவில் உள்ள லஷ்கர் முகாம் குறிவைக்கப்பட்டது என ராஜீவ் காய் கூறினார்.
பஹாவல்பூரில் உள்ள இரண்டு அடுக்கு பயங்கரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பதை புகைப்படக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பயங்கரவாத முகாமின் நிலப்பரப்பும் கட்டுமானமும் கவனமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியாவில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப், முதாசிர் அகமது போன்ற முக்கிய நபர்களும் அடங்குவர். இந்த நபர்கள் காந்தஹார் விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள்.
தாக்குதலைத் தொடர்ந்து, பீதியடைந்த பாகிஸ்தான், இந்திய எல்லைக்குள் உள்ள பொதுமக்கள் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தியது. விமானப்படை இந்த தாக்குதல்கள் ஒவ்வொன்றையும் செயலிழக்கச் செய்தது என ராஜீவ் காய் குறிப்பிட்டார்.