Tirupati temple : ஊசி போடலயா..? திருப்பதிக்கு வராதீங்க.. தேவஸ்தானம் ‘புது’ அப்டேட் !

By Raghupati RFirst Published Dec 29, 2021, 8:21 AM IST
Highlights

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி இருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகியவை நடக்கயிருப்பதால் வருகிற 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறியிருப்பதாவது, ‘ திருப்பதி கோவிலில் ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 14-ந்தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்து தரப்படும். 

ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை தேவஸ்தான விடுதி அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்த போதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்யாணக் கட்டாக்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமுடி இறக்கும் பணியில் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு தினமும் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 12 மணி வரை 10 நாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்க பல்வேறு பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. 

வைகுண்ட வாசல் தரிசனத்தையொட்டி திருமலையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி செய்து தரப்படும். மேலும், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது கோயில் நிர்வாகம்.

click me!