
வங்கிகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்தால் வரி…அடுத்த அதிர்ச்சி…
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற பொதுமக்கள் வங்கிகள் முன்பு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில் மத்திய அரசு ரொக்கம் இல்லாத மின்னணு பணபரிவர்த்தனைக்கு மாறும்படி மக்களுக்கு வேண்டுகோள்விடுத்தது. அதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் அறிவித்தது.
இதையடுத்து இந்தியாவில் மின்னணு பணப்பரிவர்த்தனையை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 13 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை கடந்த நவம்பர் மாதம்மத்திய அரசு அமைத்தது.
இந்த குழு மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்பான முதலமைச்சர்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துதங்களது இடைக்கால அறிக்கையை அளித்தது.
அந்த அறிக்கையில் பணமில்லா பரிவர்த்தையை ஊக்குவிப்பதற்கு செய்யப்பட வேண்டிய பல்வேறு சலுகைகள் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளன.
அதில் வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகைகள் வழங்குதல், டிஜிட்டல்பரிவர்த்தனையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரியை திருப்பி தருதல், மைக்ரோ ஏடிஎம் பயன்படுத்தினால்வரிச்சலுகை உள்ளிட்டவைகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இன்சூரன்ஸ், கல்வி நிலையங்கள், உர விற்பனை நிலையங்கள், ரேஷன் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்றஅனைத்து அரசுத் துறைகளும் மின்னணு பணபரிவர்த்தனைக்கு மாறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மின்னணுபணபரிவர்த்தனையில் ஈடுபடும் அரசு நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணம் அல்லது சேவை கட்டணம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் இறுதியாக அக்குழுவின் பரிந்துரை ஒன்று பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதன்படி வங்கிகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்தால் வரி விதிக்கலாம் என்றும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இத்திட்டம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.