
மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கட்டுப்பாடுகள் விதித்து மக்களை துன்புறுத்தாதீர்கள், நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது, கலவரங்கள் வெடிக்கும் சூழல் ஏற்படலாம் என மத்தியஅரசை எச்சரிக்கை செய்தது.
பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8-ந்தேதி அறிவித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டு இருந்தது.
விசாரணை
இதை கடந்த 15-ந்தேதி விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கமுடியாது என தெரிவித்தது. அதேசமயம், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசை 19-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி ஏ.ஆர். தவே ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
புதிய மனு
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகல் ரோகத்கி, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
தீவிரமான விஷயம்
அப்போது, மத்திய அரசின் கோரிக்கை மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ மக்கள் பணத்துக்காக வங்கிகள், தபால் நிலையங்களின் வாசலில் நீண்ட தொலைவுக்கு வரிசையில் நிற்கிறார்கள். பணத்தைத் தேடி அலைகிறார்கள். மத்திய அரசின் செல்லாத ரூபாய் அறிவிப்பு என்பது தீவிரமாக விஷயம்.
தடுக்கமுடியாது
இந்த அறிவிப்பால் மக்கள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஆதனால், தீர்வு கேட்டு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதைவைத்தே பிரச்சினை எந்த அளவு தீவிரமானது என்று அறியலாம். மக்களை நீதிமன்றத்துக்கு செல்லாமல் தடுத்துவிட்டால், பிரச்சினையின் தீவிரத்தை எப்படி தெரிந்து கொள்ள முடியும். தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கீழ்நீதிமன்றங்களுக்கு போவதை தடுக்க முடியாது.
கலவரம் வெடிக்கலாம்
மத்தியஅரசின் அறிவிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாட்டின் நிலைமை மோசமாக இருக்கிறது. மக்களை துன்புறுத்தினால், கலவரங்கள் வெடிக்கலாம். ஆதலால், நீதிமன்றத்தை நாட மக்களுக்கு உரிமை இருக்கிறது. இதில் மத்திய அரசுக்கு ஏதேனும் தொந்தரவு இருக்கிறதா? '' எனக் கேள்வி எழுப்பினர்.
ஏன் குறைத்தீர்கள்?
மேலும், மக்களுக்கு தேவையான என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அடுத்து வரும் நாட்களில் மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் எடுக்கும் எனக் கூறினீர்கள். ஆனால், மக்கள் பணம் மாற்றும் அளவை ரூ.4500 லிருந்து, ரூ.2 ஆயிரமாகக் குறைத்துவிட்டீர்கள். என்ன சிரமம் ஏற்பட்டுள்ளது? ரூ.100 நோட்டுகளுக்கு ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதா? '' எனக் கேள்வி எழுப்பினர்.
தீவிர நடவடிக்கை
அதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, “ செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு பின் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரூ.100 நோட்டுகளுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை. ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை வைப்பதற்காக ஏ.டி.எம். எந்திரங்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும், திருமணத்துக்காக ரூ.2.50 லட்சம் வரையிலும் வங்கியில் இருந்து எடுக்கவும் அரசு அனுமதித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் இருந்து எஸ்.பி.ஐ. வங்கி வாயிலாக, ஸ்வைப்பிங் எந்திரம் மூலம், தனிபர் நபர் ஒருவர் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாட்டில் நிலவும் சூழல், மக்களின்நிலை குறித்து உயர்மட்டக்குழு ஒன்று தீவிரமாக கண்காணித்து வருகிறது. நாளுக்கு நாள் வங்கியில் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது'' என்றார்.
வாக்குவாதம்
இந்த மனு மீதான விவாதத்தின் போது, அரசு தலைமை வழக்கறிஞர் முகல் ரோகத்கிக்கும், எதிர்தரப்பு வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, கபில் சிபல் வாதிடுகையில், “ ரூ.23 லட்சம்கோடி நோட்டுக்கள் அச்சிடப்பட வேண்டும். ஆனால், அந்த அளவுக்கு அரசுக்கு தகுதியில்லை. ஏற்கனவே ரூ.14 லட்சம் கோடி பணத்தை முடக்கிவிட்டார்கள்'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.