மோடியின் பிடிவாதத்தால் மக்களின் பணம் ​ரூ. 200 கோடி வீண்....!! - அதிர்ச்சி தகவல்

First Published Dec 17, 2016, 4:00 PM IST
Highlights


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் நடக்காமல் முடங்கியதால், மக்களின் வரிப்பணம் ஏறக்குறைய  ரூ.210 கோடி வீணாகியுள்ளது. 

 மாநிலங்களவை 92 சதவீத நேரத்தையும், மக்களவை 86 சதவீத நேரத்தையும்  எம்.பி.கள் தங்களின் கூச்சல், குழப்பம், களேபரத்தால் நாசமாக்கியுள்ளனர். 

மக்களுக்கு பயன்பட வேண்டிய முக்கிய மசோதாக்களான

 தகவல் தொழில்நுட்ப மசோதா, வாடகைத் தாய் மசோதா, ஜி.எஸ்.டி. துணைச் சட்டமசோதா, கடல்சார் இழப்பீடு மசோதா, பழங்குடியின திருத்த மசோதா ஆகியவைகள் நிறைவேறாமல் போனது. 

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் 100 நாட்கள் நடத்தப் பட  வேண்டும். அந்த வகையில், நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 16ந்தேதி முதல் இம்மாதம் 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 

இதில் சனி, ஞாயிறு கிழமை, விடுமுறை தினங்கள் போக,  21 நாட்கள் அவை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சி எம்.பி.கள் இருஅவைகளிலும், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவை களின் செயல்பாடுகளும் முழுமையாக முடங்கின. ஒரு நாள் கூட முழுமையாக அலுவல்கள் நடைபெறவில்லை. 

அவைகள்  நாள்தோறும் முடக்கப்படுவது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான எல்.கே. அத்வானி கடுமையாக கண்டனம் தெரிவித்து வேதனையுடன் பேசியிருந்தார். இதில் கூட்டத்தொடரின் கடைசிநாளுக்கு முன்பாக அவர் பேசுகையில், அவை நடக்காமல் ஒத்திவைக்கப்படுவதைப் பார்க்கும் போது, எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடலாம் போல் இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தார். 

நாடாளுமன்றம் முழுவதும் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது. மக்களுக்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தொகுதியில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், அனுப்பப்பட்ட எம்.பிகள் தங்களின் முறையற்ற செய்களால் பொன்னான நேரத்தை வீணடித்துள்ளனர். எந்த மசோதா குறித்து உருப்படியாக விவாதமோ, பேச்சு எழவில்லை. 

நாடாளுமன்றத்தின்  இரு அவைகளையும் நடத்த நிமிடம் ஒன்றுக்கு ரூ.2.50 லட்சம் செலவாகும். இது கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அப்படி இருக்க ஒரு நாள் முழுநேரம்  நடக்க நாள் ஒன்றுக்கு ரூ.10கோடி செலவாகும். 

ஆக கடந்த 21 நாட்களும்  இரு அவைகளும் எந்த அலுவல்களும், மசோதாக்களும் நிறைவேறாமல் முடிங்கியதால், மக்களின் வரிப்பணம் ரூ. 210 கோடி வீணாகியுள்ளது. 

நேரத்தைப் பொருத்தவரை, மக்களவை 92சதவீத நேரத்தையும், மாநிலங்களவை 86 சதவீத நேரத்தையும் வீணடித்துள்ளது என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். 

அதாவது, மக்களவையைப் பொருத்தவரை, அதன் 92 சதவீத நேரம், அதாவது 92 மணி  நேரம் பாழாய்போனது. மாநிலங்கள் அவையில் 86 சதவீதம் நேரம் அதாவது, 81 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவை 17 மணி நேரமும், மாநிலங்களவை 21 மணி நேரமும் மட்டுமே செயல்பட்டுள்ளது. 

தற்போது நடந்து வரும் 16-வது மக்களவையின்  சராசரி உற்பத்தி திறன், ஆக்கப்பூர்வ செயல்பாடுஎன்பது 91 சதவீதமும், மாநிலங்களவை 71 சதவீதம் என பி.ஆர்.ஆஸ். சட்ட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதில் ஆறுதல் அளிக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மசோதா மட்டும் இரு அவைகளிலும் நிறைவேறி இருக்கிறது. 

மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அனுப்பப்பட்ட எம்.பி.கள் இப்படி நேரத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீணடித்து வருவதை பார்க்கும் போது, ஏன் இவர்கள் நாடாளுமன்றம் போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் முன் எழுகிறது. 

இதற்கு முன் இதேபோல,  பாரதியஜனதா கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும், போது, 2ஜி  அலைகற்றை விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி களேபரம் செய்தது. அப்போது, மாநிலங்கள் அவை 98 மணி சதவீதமும், மக்களவை 94 சதவீதமும் வீணாய்போனது குறிப்பிடத்தக்குது. 

click me!