ரூ.4 லட்சம் கோடி கருப்பு பணம் டெபாசிட் - அதிர்ச்சியில் உறைந்த வருமான வரித்துறை

First Published Jan 10, 2017, 4:34 PM IST
Highlights


நாட்டில் செல்லாத ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிக்கு பின், வங்கிகளில் ரூ. 3 முதல் 4 லட்சம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்த கருப்புபணம் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கலாம் என வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ரூ. 14 லட்சம் கோடி

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி இரவு அறிவித்தார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 30 வரை மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட்  செய்தனர். இதுவரை ஏறக்குறைய வங்கிகளுக்கு ரூ. 14 லட்சம் கோடி வரை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது

தீவிர விசாரணை

இந்நிலையில், கருப்புபணம் வைத்துள்ள ஏராளமானவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை ஏழைகளின் ஜன்தன் வங்கிக்கணக்குகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் டெபாசிட் செய்து மாற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. அது குறித்து வருமான வரித்துறையினர் புலனாய்வு பிரிவு தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.

ரூ.4லட்சம் கோடி

இந்த ஆய்வு குறித்து வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் ரூ. 3 முதல் 4 லட்சம் கோடி வரை சந்தேகத்துக்கு இடமான முறையில் கருப்புபணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த வங்கிக் கணக்கு தாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

60 லட்சம் பேர்

வங்கிகளில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மட்டும் 60 லட்சத்துக்கு அதிகமானோர் இருக்கிறார்கள். அந்த தகவல்களை திரட்டி அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த கணக்குகளில் மட்டும் ரூ. 7.34  லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த நவம்பர் 9-ந்தேதிக்கு பின், பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ. 10 ஆயிரத்து 700 கோடி டெபாசிட்செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 80ஆயிரம் கோடி கடன்

கடந்த நவம்பர் 8-ந்தேதிக்கு பின், செயல்படாத வங்கிக் கணக்குகளில் மட்டும் ரூ. 25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்தார்.

விசாரணை

கடந்த நவம்பர் 8-ந்தேதிக்கு பின், பல்வேறு வங்கிக்கணக்குகளில், சம்பந்தமே, தொடர்பே இல்லாத நபர்கள் மூலம் பணம் டெபாசிட்செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வருமான வரித்துறைக்கு சென்றது.  அதன்பின் இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சட்ட அமலாக்கப்பிரிவு ஆகியோர் நடவடிக்கையில் இறங்கினர்.

ஒரே பான்கார்டு

இதில், ஒரு சில குறிப்பிட்ட வங்கிக்கணக்குகளில் ரூ. 2 லட்சம்  முதல் ரூ.2.5 லட்சம் வரை ரூ.42 ஆயிரம் கோடி வரை டெபாசிட்செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் கொடுக்கப்பட்ட பான்கார்டு, மொபைல் எண், முகவரி என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது.

அதேபோல, ஏழைமக்களின் ஜன் தன் வங்கிக்கணக்குகளையும் ஆய்வு செய்ததில், ரூ. ஒரு லட்சத்துக்கு மேலம் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், செயல்படாத ஜன்தன் கணக்குகளில் ரூ. 25 ஆயிரம் வரை டெபாசிட் செய்யப்பட்டு அது மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கணக்குகளையும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

click me!