
டெல்லி ஐஐடி கல்வி மையத்தில் பிஎச்.டி. இறுதியாண்டு படித்து வந்த மஞ்சுளா தேவக் என்ற மாணவி விடுதியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகள் திடீர் திடீரென தற்கோலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக் , டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் பிஎச்.டி. இறுதியாண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அவரது அறைக்கு மற்றொரு மாணவி சென்றபோது, விடுதி அறையில் உள்ள மின்விசியில் மஞ்சுளா பிணமாக தொங்கியது தெரியவந்துள்து.
இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன மாணவியின் அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனினும், படிப்பு தொடர்பான மன அழுத்தமே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
மாணவி மஞ்சுளா தேவக்கின் கணவர் மற்றும் மாமனார்- மாமியார் போபாலில் வசிக்கின்றனர். மஞ்சுளா தேவக் இறந்தது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.