
ரெயிலில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் இனிமேல் எந்த பிரச்சினைக்கும் ஆளாகக்கூடாது என்பதற்காக, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டியில் நிரந்தரமாக கீழ்தளம் ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாடுமுழுவதும் செல்லும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
தற்போது ஏ.சி. அல்லாத 2-ம் வகுப்பு படுக்கை வசதி உள்ள பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பயணித்தால், அவர்களுக்கு கீழ்தளம் ஒதுக்க மட்டுமே இப்போது விதிமுறை உள்ளது. இந்த விதிமுறை 3-அடுக்கு ஏ.சி.யிலும் நடைமுறைக்கு வரஉள்ளது.
இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ.சி. அல்லாத பெட்டிகளில் கீழ்தளம் படுக்கை மட்டுமே ஒதுக்கீடு செய்யும் விதிமுறை இருந்தது. இனிமேல், 3-அடுக்கு ஏ.சி. பெட்டியிலும் கீழ்தளம் படுக்கை தானாகவே ஒதுக்கப்பட்டு விடும். இதற்கான மென்பொருள் தயாராகிவிட்டது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு இந்த வாரத்தில் அரசு அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் மாற்றுத்திறனாளி வீராங்கனை சுபர்னா ராஜ்க்கு, நாக்பூர்-நிஜாமுதீன் கரீப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேல்அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு. அவர் கீழடுக்கு படுக்கை வசதி கேட்டும், ரெயில்வே அதிகாரிகள் ஒதுக்கவில்லை. இதையடுத்து, இரவுமுழுவதும் தரையில் படுத்து பயணம் செய்த அந்தவீராங்கனை, ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு, இனிமேல் நடக்காது என்று உறுதியளித்தார். இதையடுத்து, இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஏ.சி.3 அடுக்கு படுக்கையில் கீழ்தளம் இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் ரெயில்வே பிளாட்பார்ம், ரெயிலில் எளிதாக ஏறவும், இறங்கும் வசதியாக மாற்றப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள், பல ரெயில் பெட்டிகளில் கண்பார்வை இழந்தோர் படிக்கும் வகையில் பிரெய்லி வாசங்களும் வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.