பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவிட உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்

Web Team   | Asianet News
Published : Feb 29, 2020, 11:28 AM IST
பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவிட உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்

சுருக்கம்

டெல்லி கலவரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 3 நாட்களாக நடந்த கலவரத்தில் 27 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டோர், போலீஸார், பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.இந்தக் கலவரம் தொடங்குவதற்கு முன்பாக, பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா, மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் மக்களைத் தூண்டிவிடும் வகையில் வெறுப்புணர்வுடன் பேசியதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், " பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும், இடமாற்றம் செய்யும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது.உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதைக் காங்கிரஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கூறுகையில், " மத்திய அரசு நீதித்துறையின் மூச்சை நிறுத்த முயல்கிறது. மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முறிக்க முயல்வது வேதனையாக இருக்கிறது. எனக்கு வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அளித்த விளக்கத்தில், “நீதிபதி முரளிதர் ஹரியாணா-பஞ்சாப் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நடைமுறை விதிமுறைப்படி கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில்தான் செய்யப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு முரளிதரை இடமாற்றம் செய்து பரிந்துரை செய்தது அடிப்படையில்தான் இது நடந்தது. இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன் நீதிபதி முரளிதரிடம் அனுமதி கேட்டுதான் செய்தோம்” எனத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

அட்வான்டேஜ் எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்.. தினமும் 100 கூடுதல் விமானங்கள்.. திணறும் இண்டிகோ!
இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்