பாஜக தலைவர்கள் 3 பேர் மீது எப்ஐஆர் போடுங்க.. 1984 சம்பவம் மறுபடியும் நடக்க விடமாட்டோம்.. டெல்லி ஐகோர்ட் அதிரடி

By Asianet TamilFirst Published Feb 27, 2020, 4:06 PM IST
Highlights

டெல்லியில் மீண்டும் 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் போல் நடக்க அனுமதிக்கமாட்டோம், பாஜக தலைவர்கள் 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யுங்கள் என்று டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

டெல்லி கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், சமூகச் செயற்பாட்டாளர் பரா நக்வி ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். அதில், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு டெல்லியில் நடக்கும் வன்முறை தொடர்பாக வன்முறையாளர்கள் மீதும், வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீஸ் துணை ஆணையர் ராஜேஷ் தியோவும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது நீதிபதி முரளிதர் , "பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பேசிய வீடியோவைப் பார்த்தீர்களா?" எனக் கேட்டார். அப்போது துஷார் மேத்தா, ''நான் தொலைக்காட்சியில் அந்தக் காட்சிகளை இன்னும் பார்க்கவில்லை'' என்றார். போலீஸ் அதிகாரி தியோ, "நான் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா பேசியதைத்தான் பார்த்தேன் கபில் மிஸ்ரா பேசிய வீடியைவைப் பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி முரளிதர், "டெல்லி போலீஸாரின் நிலையைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது. நீதிமன்ற அறையிலேயே  கபில் மிஸ்ரா பேசிய வீடியோ ஒளிபரப்பாகட்டும்

மறுபடியும் டெல்லியில் 1984சீக்கிய கலவரம் போன்ற சம்பவத்தை எங்கள் கண்முன்னே அனுமதிக்க முடியாது; நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜக தலைவர்கள் 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இறந்தவர்களின் உடலை முறையாக அப்புறப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனியான தொலைபேசி எண்கள் மற்றும்  வீடுகளை இழந்துள்ளோர்க்கு தங்குமிட வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

click me!