40 சேவைகள் டோர் டெலிவரி: ஆம் ஆத்மி அரசின் அபாரத் திட்டம் இன்று தொடக்கம்!

By thenmozhi gFirst Published Sep 10, 2018, 2:21 PM IST
Highlights

40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீ்ட்டுவாசலில் அளிக்கும் ஆம் ஆத்மி அரசின் திட்டம் டெல்லியில் இன்று தொடங்கப்படுகிறது. திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களின் வீட்டுக்கே வந்து அளிக்கப்படும்.

40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீ்ட்டுவாசலில் அளிக்கும் ஆம் ஆத்மி அரசின் திட்டம் டெல்லியில் இன்று  தொடங்கப்படுகிறது. திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களின் வீட்டுக்கே வந்து அளிக்கப்படும். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் அரசின் சேவைகளைப் பெறுவதற்காக எங்கும் வரிசையில் நிற்கத் தேவையில்லை வீட்டுக்கே வந்து சேவைகள் அளிக்கப்படும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

அந்த திட்டத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் பைஜால் தடைவிதித்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் கடந்த 4-ந்தேதி வழங்கிய தீர்ப்பில் டெல்லி அரசின் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் தடைவிதிக்க கூடாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் ஆம் ஆத்மி அரசின் கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கூடுதலாக 30 சேவைகள் விரைவில் வழங்கப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா அறிவித்திருந்தார். சாதிச் சான்றிதழ், புதிய குடிநீர் இணைப்பு, வருமானவரிச் சான்று, ஓட்டுநர் உரிமம், ரேஷன்கார்டு, திருமணப் பதிவேடு, நகல் ஆர்.சி., ஆர்.சி.யில் வீட்டு முவரியை மாற்றுதல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சேவைகள் அடங்கும். 

இதன்படி டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஒட்டுநர் உரிமம் எடுக்க விரும்பினால், அவர் அரசு அங்கீகரித்துள்ள கால் சென்டருக்கு அழைப்பு செய்து தகவலைக் கூறினால் போதுமானது. அதன்பின் கால் சென்டரில் இருந்து வீட்டுக்கு வரும் நபர்கள் தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கான பணிகளைச் செய்வார்கள். இதற்குக் குறைந்தபட்சக் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் விடுத்த அறிவிப்பில், டெல்லிவாழ் மக்களுக்கு வீட்டு வாசலுக்கே சேவைகள் கிடைக்கப் போகிறது. வீட்டுக்கே வரும் சேவையின் மூலம் ஊழலுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் செப்டம்பர் 10-ம் தேதி டெல்லி மக்களுக்கு 40 சேவைகள் வீட்டு வாசலில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். திருமணச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கும், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வீட்டுக்கே பெறவும் ரூ.50 கட்டணமாகச் செலுத்தவேண்டியது இருக்கும். இந்தச் சேவைகள் யாவும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!