குப்பைகளின் தலைநகராக மாறிய டெல்லி! நேரடியாக களமிறங்கிய முதல்வர்! மக்களோடு இணைந்து தூய்மை ‍பணி!

Published : Sep 23, 2025, 06:50 PM IST
Delhi CM Rekha Gupta

சுருக்கம்

தலைநகர் டெல்லியை தூய்மையின் நகராக மாற்ற முயற்சி எடுத்து வரும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மக்களோடு, மக்களாக இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லி. நாடாளுமன்ற கட்டடம், குடியரசுத் தலைவர் மாளிகை என நாட்டை ஆளும் அதிகார மையமாக டெல்லி விளங்கி வருகிறது. டெல்லி முழுவதும் பாரம்பரிய கட்டடங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நாடாளுமன்றம் அமைந்துள்ள கண்ணாட் பிளேஸ் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டடங்கள் உள்ளன.

குப்பைகளின் தலைநகராக மாறிய டெல்லி

இப்படியாக நாட்டின் தலைநகரமாக மட்டுமின்றி புராதன கட்டங்களின் தலைநகராகவும், அழகான நகராகவும் விளங்கி வந்த டெல்லி கடந்த சில ஆண்டுகளாக குப்பைகளின் தலைநகராக மாறி வருகிறது. நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி, பழைய டெல்லி என தலைநகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. நகரின் பாலங்கள், கட்டங்களின் சுவர்களில் எல்லாம் போஸ்டர்கள் நிறைந்து அசுத்தமான தலைநகராக டெல்லி மாறிக் கொண்டிருக்கிறது.

முதல்வர் ரேகா குப்தாவின் தீவிர முயற்சி

மக்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் நிறைந்துள்ளன. தீலா சீட்சித் மற்றும் மதன் லால் குரானா ஆகியோர் ஆட்சி செய்தபோது ஓரளவு சுத்தமாக இருந்த டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 ஆண்டு கால ஆட்சியில் குப்பை கூளமாகி விட்டது. கடந்த தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை வீழ்த்தி விட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். தான் பதவியேற்றது முதல் டெல்லி நகரை தூய்மையாக்க ரேகா குப்தா தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

தூய்மை பணியில் ஈடுபட்ட முதல்வர்

டெல்லியை சுத்தமாக வைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், நகரை சுத்தமாக வைப்பது குறித்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் இன்று தூய்மை பணி நடந்தது. இதனை தொடங்கி வைத்த முதல்வர் ரேகா குப்தா, தானும் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக குப்பைகளை அகற்றினார். சுவர்களில் ஒட்டபப்ட்டு இருந்த போஸ்டர்களை நீக்கி சுத்தம் செய்தார்.

டெல்லி மக்களுக்கு வேண்டுகோள்

தலைநகரை தூய்மையாக்க முதல்வரே நேரடியாக் களமிறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டதை கண்டு டெல்லி மக்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த தூய்மை பணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேகா குப்தா, ''ரிங் ரோட்டில் நாங்கள் ஒரு தூய்மைப் பணியை நடத்தி வருகிறோம். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தூய்மைப் பணியில் பங்கேற்றுள்ளனர். இது தொடர வேண்டும். டெல்லி மக்கள் அனைவரும் சுவர்களில் எழுதுவதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.

போஸ்டர்களை ஒட்ட வேண்டாம்

அனைத்து அரசியல்வாதிகளும், குறைந்தபட்சம் என் புகைப்படத்துடன் போஸ்டர்களை ஒட்ட வேண்டாம். நகரை அசிங்கப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. தூய்மைப் பணி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இது நமது நகரம், நமது தேசம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புகையிலைப் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் மக்கள் தெருவில் வீசுவதை நிறுத்த வேண்டும். குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும்''என்றார்.

நள்ளிரவு 12 மணி வரை..

தொடர்ந்து பேசிய ரேகா குப்தா, ''ராம்லீலா, துர்கா பூஜை மற்றும் பிற கலாச்சார-மத நிகழ்வுகளின் போது நள்ளிரவு 12 மணி வரை இனிமேல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!