டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் கிடைத்ததையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் மே 10ஆம் தேதி (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்ன், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அதேசமயம், ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியின் கோரிக்க்கையை நிராகரித்தது.
வாக்குப்பதிவு விவரங்களை 48 மணி நேரத்துக்குள் வெளியிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக எந்த அதிகாரபூர்வ பணிகளையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மட்டுமே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் கிடைத்ததையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகள், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். சிறைக்கு வெளியே காத்திருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை பார்த்து கெஜ்ரிவால் உற்சாகமாக கையசைத்தார். தொடர்ந்து, ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் 50 நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், வெடி வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, கட்சி தொண்டர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நான் விரைவில் வருவேன் என்று உறுதியளித்தேன். அதன்படி, வெளியே வந்துள்ளேன். நாளை காலை 11 மணிக்கு கன்னகட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு செல்லவுள்ளேன். மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளேன்.” என்றார்.