டெல்லி பட்ஜெட் அறிவிப்பில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, தனது 10ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. ரூ.76,000 கோடி பட்ஜெட்டை ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்துள்ளது. டெல்லி அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், இந்த பட்ஜெட் ராம ராஜ்ஜியத்தை மையமாக கொண்டது என்றார். “டெல்லி அரசு ராம ராஜ்ஜியத்தை கொண்டு வர பாடுபடுகிறது. இங்கே உள்ள ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அனைவருமே கடவுள் ராமரால் ஈர்க்கப்பட்டவர்கள்தான். கெஜ்ரிவால் தலைமையிலான அசு கடந்த 9 ஆண்டுகளாக இரவு, பகலாக பொதுமக்களின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக அயராது உழைத்துள்ளது.” என அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கலின்போது, முதலமைச்சரின் மகளிர் கண்ணியம் திட்டத்தை அமைச்சர் அதிஷி அறிவித்தார். அந்த திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் தலா ரூ.1000 வழங்கப்படும். முதல்வரின் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் டெல்லி அரசு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் என அமைச்சர் அதிஷி அறிவித்தார்.
இத்திட்டத்துக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்ணுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். டெல்லியில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. அந்தப் பெண் அரசு ஊழியராக இருக்கக் கூடாது. டெல்லி அரசின் வேறு எந்த ஓய்வூதிய திட்டத்தின் பயனாளியாகவோ இருக்கக் கூடாது என வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2014ல் டெல்லியின் ஜிஎஸ்டிபி ரூ.4.95 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த பத்து ஆண்டுகளில் டெல்லியின் ஜிஎஸ்டிபி இரண்டரை மடங்கு அதிகரித்து ரூ.11.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என அதிஷி தெரிவித்தார். டெல்லியின் தனிநபர் வருமானம் ரூ.2.47 லட்சமாக இருந்ததாகவும், ஆனால், இன்று அது தேசிய சராசரியை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கலைஞர் உலகம் அருங்காட்சியகம்: மார்ச்.6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி - எப்படி அனுமதி சீட்டு பெறுவது?
வசதி படைத்த குடும்பங்களின் குழந்தைகள் செழிப்பாக இருக்கிறார்கள். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போராடுகின்றனர். இதனை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மாற்றியுள்ளது என்று அதிஷி கூறினார். “இன்று தொழிலாளர்களின் குழந்தைகள் நிர்வாக இயக்குநர்களாக மாறுகிறார்கள். கெஜ்ரிவால் அரசின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் 2,121 குழந்தைகள் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.” என்றார்.
இந்த ஆண்டுக்கான கல்வி பட்ஜெட் ரூ.16,396 கோடியாக உள்ளதாகவும், அரசு தொடர்ந்து கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் அதிஷி குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில், கல்விக்கான வரவு செலவுத் திட்டம் இருமடங்கு அதிகரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், மொத்த செலவினத்தில் நான்கில் ஒரு பங்கு கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.