
டில்லியில் காற்று மாசின் அளவு அபாயத்தை எட்டியுள்ளது. இதனால் டில்லியே புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. அதிகப்படியான காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை அளக்கும் ஏர் குவாலிட்டி இன்டக்ஸ் (Air Quality Index) 300-400 இருந்தாலே மோசமான நிலை. ஆனால், டில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசின் அளவு 400ஐத் தாண்டிவிட்டது.
இதனால், சாலையில் புகைமூட்டம் சூழ்ந்து எதிரே வரும் வாகனங்களோ முன்னே செல்லும் வாகனங்களோ கண்ணுக்குத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தளவிற்கு காற்று மாசு, புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
காற்று மாசு காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், சரும பாதிப்புகள் என ஆரோக்கியமற்ற சூழல் நிலவிவருகிறது.
டில்லியில் காற்று மாசு குறித்து இந்திய மருத்துவச் சங்கம் கூறுகையில், வழக்கமாக உள்ளதைவிட காற்று மாசு 12-லிருந்து 19 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், டில்லியின் தற்போதைய சூழலைப் பிரதிபலிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
மதுரா - ஆக்ரா சாலையில் பால்தேவ் மந்திர் என்னும் பகுதியில், எதிரில் உள்ள வாகனம் தெரியாமல் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொள்ளும் காட்சி மனதைப் பதறவைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
<iframe frameborder="0" width="480" height="270" src="//www.dailymotion.com/embed/video/x688jrq" allowfullscreen></iframe>
காற்று மாசு காரணமாக டில்லியே புகை மண்டலமாக காட்சியளிப்பதால், பள்ளிகளுக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பது தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வருத்தம் தெரிவித்துள்ளார்.