மிடில் கிளாஸ் மக்களே ! உங்களுக்கு மத்திய அரசின் தீபாவளிப் பரிசு என்ன தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Oct 2, 2019, 7:00 AM IST
Highlights

வருமான வரி செலுத்துவோருக்கு தீபாவளி பரிசாக, வரி விகிதங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதற்காக, கார்ப்பரேட் வரி விகிதத்தை, சமீபத்தில் மத்திய அரசு குறைத்தது. அடுத்த கட்டமாக, மத்திய தர வர்க்கத்தினரிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, தகவல் வெளியிட்ட, மத்திய அரசு அதிகாரிகள்,  வரி விகிதங்கள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, நேரடி வரி தொடர்பான குழு, சமீபத்தில், மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில், வரி விதிக்கப்படும் அடுக்குகளில் மாற்றம் செய்யவும், வரி விகிதங்களை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வருமான வரி செலுத்துவோருக்கு, குறைந்தது, 5 சதவீதம் பயன் அளிக்கும் வகையில், சில மாற்றங்களை செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. 
மேலும், 5  முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, தற்போது, 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை, 10 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக வருவாய் ஈட்டும் பிரிவில் உள்ளோருக்கான வரி அடுக்கை, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 
இதுதவிர, மேலும் சில சலுகைகளும் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

click me!