
வங்கக்கடலில் உருவாகி தீவிரப் புயலாக வலுப்பெற்ற மோன்தா புயல் நேற்று இரவு ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த சமயத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசியது. புயல் காரணமாக ஆந்திரா மட்டுமல்லாது ஒடிசாவின் 15 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
மாலை 7.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கிய புயல் அடுத்த 4 மணி நேரத்தில் கரையை கடந்து முடிந்தது. தொடர் சூறாவளி காற்றோடு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஆந்திர கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் காரணமாக ஒடிசாவின் தெற்கு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தார். முதல்வர் வெளியிட்ட அறிக்கையின்படி 22 மாவட்டங்களில் 488 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாப்பதற்காக 3174 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களில் சுமார் 76000 மக்கள் தங்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.