இது மோடி... ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: பிரதமர் தாக்கு!

By Manikanda PrabuFirst Published Mar 31, 2024, 8:12 PM IST
Highlights

ஊழல்வாதிகளே கவனியுங்கள் இது மோடி; உங்களுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை தொடரும் என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி முதன்முறையாக இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். தன் மீதான தாக்குதல்கள் ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை நிறுத்தாது எனவும், ஊழலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

“ஊழலுக்கு எதிராக மோடி முழு பலத்துடன் போராடும் போது, இவர்கள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள்; மோடியை மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை எனது பாரதம் எனது குடும்பம், அதை ஊழல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.” என பிரதமர் மோடி கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியினர் போராட்டம் நடத்திய நிலையில், பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

“என் நாட்டை ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்ற நான் ஒரு பெரிய போரை நடத்துகிறேன். அதனால்தான் அவர்கள் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் கூட ஜாமீன் கிடைக்காமல் இருக்கிறார்கள்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்பது இரு அணிகளுக்கு இடையே நடக்கும் சண்டை. ஒரு பக்கம் ஊழலை ஒழிப்பதில் உறுதி பூண்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றொரு பக்கம் ஊழல் தலைவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இந்தியா கூட்டணி. ஊழலை ஒழிக்க வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி? 90’ஸ் கிட்ஸ்களுக்கு எப்போது திருமணம்? பஞ்சாங்க கணிதர்கள் கணிப்பு!

ஊழல் செய்பவர்கள் இதனை கேட்டுக் கொள்ளுங்கள் என்ற பிரதமர் மோடி, “மோடி மீது எத்தனை தாக்குதல்களை நடத்தினாலும், மோடி நிறுத்தப்போவதில்லை. எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டை கொள்ளையடித்தவர்கள் அதனை திருப்பி தந்தே ஆக வேண்டும். இது மோடியின் உத்தரவாதம்.” என்றார்.

கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்க காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். “இன்று, காங்கிரஸின் மற்றொரு தேசிய விரோதச் செயல் அம்பலமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பின் மிக முக்கியமான இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள கச்சத்தீவு, சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.” என்றார்.

காங்கிரஸ் அரசின் தவறான செயல்களுக்கு இந்தியா இன்னும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.

click me!