
சமூக அடையாளத்துக்காக மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அனைவரும் பார்க்கும் வகையில் சாகும்வரை தூக்கில் போட வேண்டும் என்று பெண் துறவி சாத்விசரஸ்வதி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்து சமய மாநாடு
மத்தியப் பிரதேசம், சின்ட்வாடா நகரில் சனாதன் தர்மா பிரசார் சேவா சமிதி என்ற அமைப்பை சாத்வி சரஸ்வதி நடத்தி வருகிறார். கோவா தலைநகர் பானாஜி அருகே இருக்கும், ராம்நாதி கிராமத்தில், அனைத்து இந்திய இந்து மாநாடு நேற்று முன் தினம் நடந்தது. இதில் சாத்வி சரஸ்வதி கலந்து கொண்டார்.
சாகும்வரை தூக்கு
அப்போது அவர் பேசுகையில்,“ சமூக அடையாளத்துக்காக தங்களின் சொந்த தாயின் சதையை சாப்பிடும் நபர்களை, மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் தூக்கில் போட வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மாட்டிறைச்சி சாப்பிடும் நபர்களை பொது இடத்துக்கு அழைத்து வந்து சாகும் வரை தூக்கில் போட வேண்டும். நம்முடைய கோமாதா வை பாதுகாக்க இது ஒன்றுதான் சரியான வழி.
ஆயுதம் தேவை
இந்துக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் ஆயுதங்கள் வைத்து இருக்க வேண்டும். ஆயுதங்களை வைத்து இருக்காவிட்டால் நாம் எதிர்காலத்தில் அழிக்கப்பட்டுவிடுவோம். இன்று இந்திய தேசம் பல திசைகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்கிறது.
இந்தியாவில் இருந்து காஷ்மீரை தனியாகப் பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன, அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பசு அவமதிக்கப்படுகிறது.
யாருக்கும் அதிகாரமில்லை
இந்து ராஷ்டிரா ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களை தடை செய்ய வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன. இந்துக்கள் மூலம் இந்து நாடு உருவாக்குவதை தடுக்க நாட்டில் யாருக்கும் துணிச்சலும், அதிகாரமும் இல்லை. இவையெல்லாம் காவித் தீவிரவாதம் இல்லை. காவி என்பது, நாட்டுக்காகவும், தர்மத்துக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகும் எனத் தெரிவித்தார்.
கண்டனம்
ஆனால், இந்த பேச்சுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தள்ள காங்கிரஸ் கட்சி, இவரின் பேச்சால் வகுப்புவாதம், கலவரம் வந்துவிடும், இவர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கிரிஷ் சோடேங்கேர் வலியுறுத்தியுள்ளார்.