அசாம் மாநிலம் கவுகாத்திக்குள் நுழைய ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
ராகுல் காந்தியின் யாத்திரையானது நாகாலாந்தை கடந்து தற்போது பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள நிலையில், அவரது யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்திக்குள் நுழைய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. போலீசார் ஏராளமான தடுப்புகளை வைத்து ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை ஏற்படுத்தினர். இதுகுறித்து காரணத்தை கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு: அண்ணா பல்கலை., சுற்றறிக்கையால் சர்ச்சை!
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடைகளை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் உடைத்தெறிந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை கவுகாத்திக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், இந்தியர்களை கண்மூடித்தனமாக கீழ்ப்படிய பாஜக, ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
முன்னதாக, அசாம் மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியான புனித ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ரவா தானுக்குச் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி சென்ற பேருந்து பாஜக தொண்டர்களால் வழிமறித்து தாக்கப்பட்டதாகவும், அப்போது ஜெய் ஸ்ரீராம், மோடி... மோடி... முழக்கங்களை அவர்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.