தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட்டதற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்
தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.20 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால் ஜூன் மாதத்தில் வெறும் 2.7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதாவது, 2023-2024 ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.
இதனிடையே, காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை களைவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் எனவும், அதுவும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, தமிழகத்துக்கு வர வேண்டிய 37.97 டி.எம்.சி நீர் பற்றாக்குறையை கர்நாடக மாநிலம் வழங்க எந்த உத்தரவும் இந்த கூட்டத்தில் பிறப்பிக்கப்படவில்லை.
இதையடுத்து, நிலுவையில் உள்ள காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க புதிய அமர்வு இன்றே அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
இதனிடையே, மாநிலத்தின் குடிநீர்த் தேவை, தண்ணீர் இருப்பு, விவசாயிகளின் உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வர் டிகே சிவக்குமார், காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு இவ்வளவு விரைவாக தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ஜிஎஸ்டி வெகுமதி திட்டம்: நுகர்வோருக்கு ரூ.1 கோடி பரிசு!
அதேசமயம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் இருந்து 10 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 22 ஆயிரத்து 401 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி மாண்டியாவில் கர்நாடகா மாநில பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறக்கக் கூடாது என பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட்டதற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் இருந்து 10 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து கூறுகையில், “கர்நாடகாவில் விவசாயிகளின் உயிரைப் பலி கொடுத்தாலும் அரசியலுக்காக காங்கிரஸ் எதையும் செய்யும். இது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.