மோடிக்கு சாதகமாக தேர்தல் அறிவிப்பு தாமதம்...? தேர்தல் ஆணையம் மீது காண்டான காங்கிரஸ்!

By Asianet TamilFirst Published Mar 5, 2019, 10:53 AM IST
Highlights

கடந்த 2017-ம் ஆண்டில் ஹிமாச்சல்பிரதேச மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்திவருவது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது. பிரதமர் மோடிக்கு சாதகமாகத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துகிறது என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மே முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் தொடங்கி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போதுவரை தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிப் போவது பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், தேர்தல் தேதி அறிவிக்காமல் இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். 
மேலும் அவர் கூறும்போது, “2014 மக்களவை தேர்தல் தேதி மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு விழாக்களை பிரதமர் மோடி தொடர்ச்சியாக நடத்திவருகிறார். இதையெல்லாம் சாதனைகள் என பிரதமர் மோடி சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார். இதற்கான விளம்பரங்கள் அரசு செலவில் வெளியிடப்படுகின்றன.
ஒரு வேளை தேர்தல் தேதியை அறிவித்திருந்திருந்தால், இவ்வாறு விளம்பரப்படுத்த முடியாமல் போயிருக்கும். ஆனால், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் ஹிமாச்சல்பிரதேச மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் தேதி அறிவிப்பில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்தது”. இவ்வாறு அகமது படேல் குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒவ்வொரு ஊரிலும் பிரசாரம் செய்யும்போது, அங்கே அரசு விழாவுடன் சேர்த்து பாஜக பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் செயல்பாட்டை காங்கிரஸ் குறை கூறியிருக்கிறது.

click me!