
பாரதியஜனதா அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும், பழிவாங்கும் அரசியலுக்கும் எங்கள் கட்சியின் தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் பணியமாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ. ரெய்டு
ஐ.என்.எக்ஸ். ஊடகத்துக்கு அன்னிய முதலீடு அனுமதி பெற்றுக்கொடுத்த விஷயத்தில் முறைகேடு நடந்தாக குற்றம்சாட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லாலுவீடு
இதேபோல, பினாமி பெயரில் ரூ. ஆயிரம் கோடி சொத்து சேர்த்தது தொடர்பான குற்றச்சாட்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவின் குடும்பத்தினர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
பழிவாங்கும் அரசியல்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ பாரதிய ஜனதா அரசின் மரபணு என்பது பழிவாங்கும் அரசியல் என்ற உண்மை தெரிந்துவிட்டது.
பணியமாட்டோம்
எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமோ அல்லது எந்த காங்கிரஸ் தலைவரோ அல்லது எந்த எதிர்க்கட்சி தலைவரோ, பா.ஜனதாவின் அரசியல் பழிவாங்கும் செயலுக்கும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் பணிந்துவிடமாட்டார்கள்.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பல ஊழல்களில சிக்கி இருக்கி, அமைச்சர்களாக பதவியில் இருக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை.
மோடிக்கு கேள்வி?
ஊழல், ஒழுக்கம் என்ற அளவுகோலை வைத்து இருக்கும் பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்புகிறோம். சஹாரா-பிர்லா குற்றச்சாட்டில் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், ஏன் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை.
குஜராத் மாநிலத்தில் முதல்வராக மோடி இருந்போது, பெட்ரோலிய நிறுவன ஊழலில் அரசுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பு ஏற்பட்டது. அது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை?
வியாபம் என்னாச்சு?
மத்தியப்பிரதேசத்தில் நடந்த மிகப்பெரிய வியாபம் ஊழல் வழக்கில் இதுவரை அந்த மாநில முதல்வர் சிவராஜ் சவுகானின் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் ஏன் விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிடவில்லை.
நடவடிக்கை இல்லையே?
லலித்மோடி நாட்டைவிட்டு தப்பிச்செல்ல ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவினார்கள் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. லலித்மோடி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணை அமைப்புகளால் தேடப்படும் நபர் அவரை தப்பிக்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை.
சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவருக்கு எதிராக பணியாதவர்களையும், அவர்களின் குரலையும் எப்படி ஒடுக்குகிறார்கள் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.