ராகுல் காந்தி வேலையில்லாமல் இருப்பதால் அப்படி அர்த்தம் இல்லை: அண்ணாமலை காட்டம்!!

By Dhanalakshmi GFirst Published Jun 2, 2023, 6:23 PM IST
Highlights

ராகுல் காந்தி வேலையில்லாமல் இருப்பதால், இந்திய இளைஞர்களும் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பது அர்த்தமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்தியா டுடேயின் தென்மாநில மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ''ராகுல் காந்தி வேலையில்லாமல் இருப்பதால், இந்திய இளைஞர்களும் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பது அர்த்தமில்லை. 2023 மக்களவை தேர்தல் தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். வளர்ச்சி மற்றும் மோடி அவர்களின் செல்வாக்கு  தேர்தலில் பிரதிபலிக்கும். 

காங்கிரசை சேர்ந்த மாணிக்கம் தாகூர் காங்கிரசை ''கட்டளை பிறப்பிக்கும் உயர் இடம்'' என்று கூறுவார். ஆனால், நான் கவுரவமாக மோடிஜியை பாஜக கார்யகர்த்தா என்று அழைக்கலாம். காங்கிரஸ் கட்சியின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூரின் தலைவர் ராகுல் காந்திக்கு வேலையில்லை என்பதால், நாட்டில் இளைஞர்களும் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று அவர் கருதிவிடக் கூடாது. 

கர்நாடகாவில் பாஜகவுக்கு கிடைத்த வாக்கு வங்கிகளில் எந்த மாற்றமும் இல்லை. கர்நாடகா தேர்தலில் நாங்கள் நன்றாகவே செய்து இருந்தோம். புதுவையில் நாங்கள் ஆளும்கட்சியின் கூட்டணியில் தான் இருக்கிறோம். 2024 தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜகவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 2014ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவின் அரசியல் வேறு மாதிரி இருந்தது. தமிழ்நாட்டில் பாஜக தாமதமாக வேரூன்ற துவங்கியது. வாஜ்பாய் காலத்தில் பெரிய வளர்ச்சியை கண்டு இருக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த முறை பிரதமர் மோடி பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார். மேலும் பண்பாட்டு மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோடியின் செல்வாக்கு தென்னிந்தியாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்து இருந்தார். ''ஒவ்வொரு தேர்தலும் வேறுபட்டது. ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் தென்னிந்தியாவில் நுழைய முடியாது. கர்நாடகாவில் தோல்வியடைந்துள்ளனர். தென்னிந்தியாவில் மோடி தாக்கத்தை ஏற்படுத்த முடியாது'' என்று தெரிவித்து இருந்தார். இதற்கும் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

click me!