
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை மண்டல காங்கிரஸ் தேநீர் கடையில் ரூ. 2 லட்சத்துக்கு டீ குடித்துவிட்டு, பணம் தராமல் இழுத்தடிப்பதால், இனி டீ சப்ளை செய்ய முடியாது என கடைக்காரர் தெரிவித்துவிட்டார்.
காங்கிரஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இதுபோல் மிகவும் மோசமான சூழலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையைச் சேர்ந்தவர் இந்தர் ஜோஷி. இவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதான் பகுதியில் செயல்படும் மும்பை மண்டல காங்கிரஸ் குழு அலுவலகத்துக்கு அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டீ கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் டீ மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள், இங்கு கடனுக்கு டீ நாள்தோறும் சப்ளை செய்யப்படும். மாதம் ஒருமுறை டீ குடித்ததற்கான பணம் மொத்தமாக வழங்கப்படும்.
ஆனால், கடந்த 4 மாதங்களாக இவருக்கு டீ குடித்த பாக்கித் தொகையை காங்கிரஸ் கட்சி தராததால் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கடனுக்கு டீ சப்ளை செய்ய முடியாது என தெரிவித்து விட்டார்.
‘காசு கொடுத்தால்தான் டீ’
இது குறித்து இந்தர் ஜோஷி கூறுகையில், “ காங்கிரஸ் அலுவலகம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எனது குடும்பத்தினர் டீ கடை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் டீ குடித்து விட்டு நீண்ட காலமாக பணம் தரவில்லை. பாக்கித் தொகை ஏறிக்கொண்டே சென்றது. அதனால், இப்போது கடனுக்கு டீ கொடுப்பதில்லை. மொத்த பாக்கியான ரூ. 2 லட்சத்தை கொடுத்தால் தான் கடனுக்க டீ வழங்கப்படும் எனத் தெரிவித்துவிட்டேன். கடனுக்கு டீ கேட்டால் காசு கொடுத்து டீ குடியுங்கள் என்று கூறிவிட்டேன்'' என்று தெரிவித்தார்.
கட்சியினரின் பொறுப்பற்ற செயல்
இது குறித்து மும்பை மண்டல காங்கிரஸ் கட்சியின் தலைவர் நிருபம் கூறுகையில், “ டீ கடைக்காரருக்கு ரூ. 2லட்சம் பாக்கி வைத்து இருப்பது உண்மைதான். கடந்த சில வாரங்களுக்கு முன்தான் என் கவனத்துக்கு இது கொண்டுவரப்பட்டது. கட்சி உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயலால் இதுபோல் பாக்கி ஏறிவிட்டது. உண்மையில் அந்த கடைக்காரரின் டீ மிகவும் சுவையாகம், தரமாகவும் இருக்கும். ஒட்டுமொத்தமாக ரூ 4 லட்சம் பாக்கி இருந்தது, இப்போது ரூ. 2 லட்சத்தை கொடுத்துவிட்டோம். விரைவில் மீதமுள்ள ரூ.2 லட்சத்தை கொடுத்துவிடுவோம்.
ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சி கடுமையான பணப்பற்றாக்குறையால் தவிக்கிறது. பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை எங்களையும் கடுமையாக பாதித்து டீ கடைக்காரருக்கு கூட பாக்கி கொடுக்க முடியாமல் செய்து விட்டது'' என்றார்.