
ரூபாய் நோட்டு தடை, பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு ஆகியவற்றை தீவிரமாக முன்னெடுத்து மக்களிடையே கொண்டு சேர்க்க, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் கட்சித்தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ளது.
ரூபாய் நோட்டுதடை
நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதன்பின், வங்கிகள், ஏ.டி.எம்.களில் மக்கள் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
எதிர்ப்பு
இந்த ரூபாய் நோட்டு தடை உத்தரவுக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். குளிர்காலக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாரதியஜனதா கட்சிக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டு எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் முழுவதையும் முடக்கினர்.
சந்திப்பு
இதனால், காங்கிரஸ் கட்சி தலைமையில் ரூபாய் நோட்டுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒன்று திரண்டு வந்தன. ஆனால், கூட்டத்தொடர் முடியும் நாளில் காங்கிரஸ் கட்சியியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியைச் சந்தித்தபின், எதிர்க்கட்சிகளுக்கு இடையே சற்று சலசலப்பு உண்டாகி ஒற்றுமை குலைவு ஏற்பட்டது.
50 நாட்கள் முடிகிறது
இந்நிலையில், ரூபாய் நோட்டு தடை, பிரதமர் மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.
இந்த ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடும்போது, பிரதமர் மோடி 50 நாட்கள் மக்கள் பொறுமையுடன் காத்திருந்தால், புதிய இந்தியாவை, ஊழல் இல்லாத நாடாக பார்க்கலாம் எனக் கூறியருந்தார். இந்த 50 நாட்கள் காலக்கெடு வரும் 30-ந்தேதியோடு முடிகிறது.
அந்த நாளின்போது, ஆளும் மோடி அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே அனைத்து எதிர்க்கட்சிகளையும் இன்று கூட்டி காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்துகிறது.
ஆலோசனைக் கூட்டம்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ குளிர்காலக்கூட்டத் தொடரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை எதிர்த்தோம். ஆனால், கடைசி நாளில் ராகுல்காந்தி, பிரதமர் மோடியைச் சந்தித்ததால் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரட்ட அடுத்த கட்ட பேச்சுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவுக்கு அழைப்பில்லை
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தருகின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஒடிசாவின் ஆளும் பிஜூ ஜனதா தளம், தமிழகத்தின் அ.தி.மு.க., ஆந்திராவின் அசாதுதீன் ஒவாய்சியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை'' எனத் தெரிவித்தார்.
முக்கியவிசயங்கள்
இந்த கூட்டத்தில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள், இதுவரை, ரூபாய் நோட்டு தடைக்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியான விவகாரம், குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, 2013-14ம் ஆண்டில் சஹாரா நிறுவனத்தினம் பெற்ற ரூ.40 கோடி லஞ்சக் குற்றச்சாட்டு ஆகியவை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.