எல்லையில் தாெடா்ந்து நீடிக்கும் பதற்றம் : பாெதுமக்கள் வெளியேற்றம்

First Published Oct 30, 2016, 1:40 AM IST
Highlights


காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது அத்துமீறி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 15 பேர் பலியானார்கள். எல்லையில் பதற்றம் நீடிப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதுடன் அவர்களுக்கு தனது ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு மூலம் பயிற்சியும் அளிக்கிறது. இந்த பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் கடந்த மாதம் 28–ந் தேதி நள்ளிரவு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கு செயல்பட்டு வந்த 7 பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் தீவிரவாதிகள் சிலர்  கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் இந்த தாக்குதலை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான் கடந்த ஒரு மாதமாக காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி, சர்வதேச எல்லையில் உள்ள நமது ராணுவ நிலைகள் மற்றும் குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 21–ந் தேதி முதல் இதுவரை 40 முறைக்கும் மேலாக காஷ்மீரின் ரஜோரி, கத்துவா, பூஞ்ச், ஜம்மு, சம்பா மாவட்டங்களின் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 2 ராணுவ வீரர்கள் பலியாயினர். 10–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் காஷ்மீரில் எல்லையோர குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் மாலை 5.20 மணிக்கு தனது அத்துமீறிய தாக்குதலை தொடங்கியது. ஹிரா நகர் (கத்துவா), ஆர்.எஸ்.புரா, ஆர்னியா (ஜம்மு), கிருஷ்ணாகாட்டி, பலாகோட், மான்கோட் (பூஞ்ச்) சுந்தர்பானி (ரஜோரி) செக்டார் பகுதிகளில் தானியங்கி ரக துப்பாக்கிகள் மற்றும் 82 மி.மீ. மற்றும் 120 மி.மீட்டர் மோட்டார் ரக பீரங்கிகளால் கண்மூடித்தனமாக கடுமையாக தாக்கியது.  நேற்று அதிகாலை 5 மணி வரை இடைவிடாமல் எல்லைப் பகுதிகளில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் 24 நிலைகள், கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பீரங்கி குண்டுகள் கிராமவாசிகளின் வீடுகளை சல்லடையாக துளைத்தன. 

கூரைகளிலும் பீரங்கி குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறியதால் பல வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. வீடுகளுக்குள் இருந்தவர்களில் பலர் கால்களில் பலத்த காயம் அடைந்தனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டமிட்டே பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியதால் ஆவேசம் அடைந்த ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் பயன்படுத்திய அதே ரக ஆயுதங்களால் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே 12 மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. 

ஒரு சில இடங்களில் தொடர்ந்து சண்டை நீடித்தும் வருகிறது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் சில நிலைகளும், குக்கிராமங்களும் கடும் சேதம் அடைந்தன. இந்த அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் தாலுகாவில் உள்ள கோலாத் கிராமத்தில் உஷ்மா (வயது 50) என்ற பெண் ஒருவர் பலியானார். இதேபோல் பல்லான்வாடா செக்டார் பகுதியில் கோர் என்ற கிராமத்தில் ஒருவர் உயிர் இழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்

 

பாகிஸ்தான் அத்துமீறி குக்கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாலும், இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருவதாலும் கத்துவா, பூஞ்ச், ரஜோரி, ஜம்மு, சம்பா மாவட்டங்களில் எல்லையோர கிராம மக்கள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

காஷ்மீர் அரசு ஏற்படுத்தியுள்ள தற்காலிக முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து வேண்டுமென்றே பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை தாக்குதல் நடத்துகிறது. ஆனால் நமது கொள்கை அதுவல்ல. பாகிஸ்தான் கிராமங்களை நாம் இலக்காக வைத்து தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால் அதைத்தான் பாகிஸ்தான் செய்கிறது. இந்தியா முதலில் தாக்குதலை தொடங்குவதில்லை. அவர்களுக்கு பதிலடி கொடுக்கத்தான் தாக்குதல் நடத்துகின்றனர்.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நேரத்தில் இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் 2 இடங்களில் ஊடுருவ முயன்றனர். அந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. எல்லையில் எத்தகைய சவால்கள் வந்தாலும், அவை எந்த வடிவில் வந்தாலும் அதை முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்கின்றனர். கடந்த 21–ந் தேதி முதல் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் தங்கள் வீரர்கள் 15 பேர் கொல்லப்பட்ட தகவலை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக இந்தியா கூறுவது உண்மைக்கு மாறான அடிப்படையற்ற தகவல் என்றும், தங்கள் வீரர்கள் யாரும் பலியாகவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவம் கூறி இருக்கிறது.

click me!