தற்கொலை செய்து கொண்ட ‘காபி டே’ சித்தார்த் !! நேத்ராவதி ஆற்றில் உடல் மீட்பு !!

By Selvanayagam PFirst Published Jul 31, 2019, 7:41 AM IST
Highlights

கர்நாடக முன்னாள்  முதலமைச்சர்  எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல ‘காபி டே’ ஓட்டல் அதிபருமான சித்தார்த் நேத்ராவது ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். பெரும் கடன் சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
 

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக  கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ‘காபி டே’ எனும் பிரபலமான தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், காபி டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சித்தார்த் தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார். சக்லேஷ்புரா அருகே சென்றபோது டிரைவரிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த் கூறினார். அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டிச் சென்றார்.

இரவு 7.15 மணிக்கு மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த் தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்கு திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த் மாயமாகிவிட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தேடிப்பார்த்தனர். இரவு முழுவதும் தேடியும் சித்தார்த் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இதற்கிடையே சித்தார்த் மாயமான விஷயம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிந்த எஸ்.எம்.கிருஷ்ணாவும், அவருடைய குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையே நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், ஊர்க்காவல் படையினர், கடலோர காவல் படையினர், மீனவர்கள் ஆகியோர் சித்தார்த்தை நேத்ராவதி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

சித்தார்த்தை யாராவது கடத்திச்சென்று இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சித்தார்த்தின் கார் டிரைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நேத்ரா ஆற்றில் இருந்து இன்று அதிகாலை சித்தாத்தின் உடல் மீட்கப்பட்டது. பெரும் நிதிச் சுமையில் ‘காபி டே’ நிறுவனம் சிக்கித் தவிப்பதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

click me!