கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தம் என கொக்கரிப்பு..பேச்சுவார்த்தையால் வேறுபாடுகளை களையலாம் எனவும் பசப்பு!

By Asianet TamilFirst Published Jun 18, 2020, 8:09 AM IST
Highlights

தற்போது எழுந்துள்ள பிரச்னையை தூதரக, ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போது எல்லையின் கள நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. எல்லையில் மோதல் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை. இரு தரப்புக்கும் உள்ள எல்லைப் பிரச்சினை, வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் களைந்து அங்கு அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டு வர வேண்டும். 

கல்வான் பள்ளத்தாக்கு எப்போதும் சீனாவுக்கு சொந்தம். அங்கு சீனா நாட்டின் இறையாண்மை உள்ளது என்று சீன வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
எல்லையில் அவ்வப்போது அத்துமீறி செயல்படுவது சீன ராணுவத்தின் வாடிக்கை. இதேபோல கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் என்ற இடத்தில் சீனப் படைகள் முகாமிட்டன. இதனால், இந்திய படைகளும் அங்கே முகாமிட்டன. ஆயுதங்களும் அங்கே குவிக்கப்பட்டன. இந்தப் பதற்றத்தைக் குறைக்க இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் அத்துமீறி நடத்திய  தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணத்தை தழுவியுள்ளனர். பதிலடியில் சீனா  தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சீனா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


1962-ம் ஆண்டு போருக்கு பிறகு இந்தியா - சீனா எல்லையில் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டிருந்தாலும், மோதல் போக்கு ஏற்பட்டதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் நடந்துள்ள இந்த மோதலுக்கு சீனாதான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. லடாக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக சீனா மாற்ற முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானது என அந்த நாடு கொக்கரித்துள்ளது.


இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கல்வான் பள்ளத்தாக்கு எப்போதும் சீனாவுக்கு சொந்தம். அங்கு சீனா நாட்டின் இறையாண்மை உள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்னையை தூதரக, ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போது எல்லையின் கள நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. எல்லையில் மோதல் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை.


இரு தரப்புக்கும் உள்ள எல்லைப் பிரச்சினை, வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் களைந்து அங்கு அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டு வர வேண்டும். அதற்கு இந்தியாவும் சீனாவும் உறுதியுடன் உள்ளன. இரு நாடுகளும் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்துவருகின்றன. உலகின் மிகப் பெரிய நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வேறுபாடுகளைத் தாண்டி பரந்துபட்ட நலன்களே முக்கியம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது லடாக் மோதலில் சீனா தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க  ஜாவோ லிஜியான் மறுத்துவிட்டார். 

click me!