பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் ராணுவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அருணாச்சல பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இரு தினங்களுக்கு முன்னர் திறந்து வைத்தார்.
அசாமின் தேஜ்பூரில் ராணுவ பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கிருந்து அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், பணிப்பொழிவு காரணமாக அவ்வப்போது அந்த சாலை துண்டிக்கப்படும். இதனால், சீனாவுடனான எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், அங்கு 13,000 அடி உயரத்தில் மலையைக் குடைந்து உலகின் மிக உயரமான இருவழி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சேலா சுரங்கப் பாதையால் பனிப்பொழிவு காலங்களிலும் சீன எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களால் தடையின்றி செல்ல முடியும். ராணுவ பயன்பாடு மட்டுமன்றி சேலா சுரங்கப் பாதையில் உள்ளூர் மக்கள் பெரிதும் பயன் அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கைகள் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் என்று கூறியுள்ள சீனா, அப்பகுதியின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, இந்தியத் தலைவர்கள் அந்த மாநிலத்திற்குச் செல்வதற்கு வழக்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பகுதிக்கு ஜங்னான் என்றும் சீனா பெயரிட்டுள்ளது.
ஆனால், அருணாச்சலப்பிரதேசம் மீதான சீனாவின் உரிமை கோரலை இந்தியா நிராகரித்து வருகிறது. அம்மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடியின் அருணாச்சலப்பிரதேச பயணம் குறித்து அந்நாட்டு செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், ஜங்னான் பகுதி சீனாவினுடையது என்றார்.
இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அதனை சீனா உறுதியாக எதிர்க்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. சீனாவில் உள்ள ஜங்னான் பகுதியை தன்னிச்சையாக உரிமை கொண்டாட இந்தியாவுக்கு உரிமை இல்லை. இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும்.” என்றும் வாங் வென்பின் கூறினார்.