
இந்தியாவுடன் எப்போதும் ராணுவ ரீதியில் மோதிக் கொண்டு இருந்த சீனா தற்போது உலகின் மிகப்பெரிய அணையை இந்திய எல்லையில் திபெத்தில் கட்டுவதற்கு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
பிரம்மபுத்திரா பெயர் மாற்றம்:
திபெத்தில் உருவாகி ஓடிக் கொண்டு இருக்கும் ஆறு பிரம்மபுத்திரா. இது திபெத்தில் உருவானது என்பதுடன், இந்தியாவுக்குள் நுழைவதற்குள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. திபெத்தில் இருக்கும் கயிலாய மலையில் சாங்போ என்ற பெயரில் இந்த ஆறு உருவாகிறது. மலையிடுக்குகளில் நுழைந்து அருணாசலப்பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைகிறது. பின்னர் பயணித்து திபங், லோகித் ஆறுகளுடன் கலந்து பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அசாமில் நுழைந்து அங்கிருந்து வங்கதேசம் செல்கிறது. வங்கதேசத்தில் இருந்து வங்காள விரிகுடாவில் கடலில் கலக்கிறது.
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா தற்போது உலகிலேயே மிகப்பெரிய அணையை கட்டுவதற்கு அனுமதி அளித்து இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு சீனா அணையை கட்டும்போது, இது இந்தியா, வங்கதேசத்தை பெரிய அளவில் பாதிக்கும்.
பூகம்பம் ஏற்படுமா?
சீனாவில் பிரம்மபுத்திரா ஆறு திபெத் பெயரில் ''யர்லங் ஜாங்போ'' என்று அழைக்கப்படுகிறது. அருணாசலப் பிரதேசத்தில் நுழைவதற்கு முன்பு ஒரு பெரிய வளைவில் பிரம்மபுத்திரா நுழையும் இடத்தில் அணையை கட்டுவதற்கு சீனா தேர்வு செய்திருக்கிறது. இந்த இடத்தில் இருந்து தான் இந்தியா, வங்கதேசத்திற்குள் பிரம்மபுத்திரா ஆறு நுழைகிறது. இங்கு ஆற்று நீரை கட்டுப்படுத்தி மின்சாரம் தயாரிக்க சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. இது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த இடத்தில் அணையை கட்டுவது எதிர்காலத்தில் பூகம்பம் ஏற்படும்போது ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இங்கு அணையைக் கட்டுவது புவியியல் ரீதியில் பாதுகாப்பானது என்று சீனா கூறி வருகிறது.
சீனா நிதி ஒதுக்கீடு:
இந்த அணையைக் கட்டுவதற்கு சீனா 137 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. உலகில் நடைமுறைக்கு வந்து இருக்கும் எந்த திட்டத்தையும் சிறுமைபடுத்தும் வகையில் இந்த அணையை சீனா கட்டவுள்ளது. இந்தியா கவனமாக சீனாவின் இந்த திட்டத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்திய கிராமங்களுக்கு வெள்ள ஆபத்து:
இதற்கு முன்னதாக இதே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்படுத்தி வருகிறது. தற்போது சீனா கட்டுவதற்கு அனுமதி அளித்து இருக்கும் அணை திட்டத்தால், இந்தியாவுக்கு வரும் ஆற்று நீர் கட்டுப்படுத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுமட்டுமில்லை, கட்டுக்கடங்காத வெள்ளத்தால் எதிர்காலத்தில் அணையை சீனா திறக்க நேரிட்டால், இந்திய எல்லையில் இருக்கும் கிராமங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்தியாவும் அருணாசலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திராவில் அணை கட்டுகிறது.
சீனாவின் மின் உற்பத்தி திட்டம்:
2020 ஆம் ஆண்டில் சீனாவின் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப் வழங்கிய மதிப்பீட்டின்படி, ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட் மணி நேர மின்சாரத்தை இந்த அணையில் இருந்து உற்பத்தி செய்ய முடியும். தற்போது உலகின் மிகப்பெரிய அணையான த்ரீ கார்ஜஸ் அணையின் ( 88.2 பில்லியன் kWh) மின் உற்பத்தியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.