
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சில இடங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. வனப்பகுதியையொட்டியுள்ள கிராம மக்களை சிறைபிடித்து செல்லும் மாவோயிஸ்டுகள், சாலை உள்ளிட்ட அரசு கட்டமைப்பையும் தகர்த்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் மாநில போலீசார், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தீஸ்கரின் கரியபந்த் மாவட்டத்தில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மைன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து மாவோயிஸ்டுகள் 10 பேரை சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்ததாக ராய்பூர் சரக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் அம்ரேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
சிறப்பு அதிரடிப்படை (STF), கோப்ரா (CRPF-ன் உயரடுக்கு பிரிவு) மற்றும் மாநில காவல்துறையின் பிற பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் மாவோயிஸ்டுகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அம்ரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். முன்னதாக, இன்று நாராயண்பூர் மாவட்டத்தில் 16 மாவோயிஸ்டுகள் போலீசில் சரணடைந்தனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராபின்சன் குரியா கூறுகையில், ''மாவோயிஸ்டுகளின் "வெற்று சித்தாந்தத்தில் நம்பிக்கை இழந்ததாலும், அப்பாவியான பழங்குடியின மக்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய அட்டூழியங்கள் கண்டு மனம் உடைந்ததாலும் இவர்கள் சரண் அடைந்துள்ளனர்'' என்று கூறினார்.
போலீஸ் அதிகாரிகள் சொல்வது என்ன?
சரணடைந்த 16 மாவோயிஸ்டுகளும் ஜனதன சர்க்கார், சேத்னா நாட்டிய மண்டலி மற்றும் மாவோயிஸ்டுகளின் பஞ்சாயத்து போராளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கீழ்நிலைப் பணியாளர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.