சாம்சங் ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு; அமைச்சர் முன்னிலையில் உடன்பாடு!

Published : May 19, 2025, 07:58 PM ISTUpdated : May 19, 2025, 08:18 PM IST
Samsung Protest

சுருக்கம்

சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ல் ₹9,000 உயர்வும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா ₹4,500 உயர்வும் வழங்கப்படும். கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் விடுத்த ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மற்றும் சிஐடியு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் விளைவாக, சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்கப்படும். தொடர்ந்து, 2026-27 மற்றும் 2027-28 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் தலா ரூ.4,500 வீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இதன் மூலம், மூன்று ஆண்டுகளில் தொழிலாளர்கள் மொத்தம் ரூ.18,000 ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.

மேலும், தொழிலாளர்களின் பணி அனுபவத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஊதிய உயர்வும் வழங்கப்படவுள்ளது. இதன்படி, மூன்றாண்டு காலத்தில் ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்.

குறிப்பாக, நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு ஒருமுறை சிறப்பு பதவி உயர்வு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 31.03.2025 தேதியின்படி 6 ஆண்டு பணியை நிறைவு செய்த ஆபரேட்டர் 1, 2, 3 மற்றும் டெக்னிசியன் 1, 2, 3 ஆகியோருக்கு இந்த சிறப்பு பதவி உயர்வு வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுப்பு சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றியவர்களுக்கு விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த உடன்பாடு சாம்சங் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் இந்த முயற்சிக்கு தொழிற்சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!