மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, ரூ.72,961.21 கோடி வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, பெருநிறுவன வரி, வருமான வரி, சொத்து வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி, சேவை வரி போன்றவற்றில் மத்திய அரசுக்குக் கிடைக்கும் மொத்த வரி வருவாயிலிருந்து 41 சதவீதம், ஒரு நிதியாண்டில் 14 தவணைகள் மூலம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையின்படி, மத்திய அரசு, மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக இந்த நிதியாண்டில் ரூ.10.21 லட்சம் கோடியை பகிர்ந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில் கூடுதல் தவணையை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் இரண்டாம் தவணை நிதியாக ரூ.72,961 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் இன்று விடுவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 11ஆம் தேதியன்று டிசம்பர் மாதத்துக்கான முதல் வரிப் பகிர்வு தவணை அளிக்கப்பட்டிருந்தது. இதனையும் சேர்த்து மத்திய அரசு இந்த மாதத்தில் அளித்திருக்கும் வரிப் பகிர்வு ரூ.1.46 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு? அடிக்கப்போகும் ட்ரிபிள் ஜாக்பாட் - முதல்வர் ஸ்டாலின் எடுக்கு முடிவு!
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த ரூ .72,961.21 கோடி மதிப்புள்ள கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தவணை 2024, ஜனவரி 10 அன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். 2023, டிசம்பர் 11 அன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ரூ .72,961.21 கோடியை விட இது கூடுதலாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338.44 கோடி, மத்தியப்பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, மேற்குவங்கத்துக்கு 5,488.88 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.4608.96 கோடி, ராஜஸ்தானுக்கு 4,396.64 கோடி, தமிழகத்துக்கு ரூ.2,976.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.