
நாட்டில் தற்போதைய பரபரப்பு விவாதம், ஆதார் பற்றியதாகத்தான் உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட ஆதார் அடையாள அட்டை, இப்போது எந்த ஒரு நபரின் அனைத்துக்குமான ஆதாரமாகி விட்டது. ஆதார் எண் கொண்டே, அரசு நலத்திட்டங்களின் பயன்களை ஒருவர் பெறுகிறார்.
இப்படி அரசு நலத்திட்டங்களை, உதவிகளைப் பெறுவதற்காக, ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆதாரை இந்த நலத்திட்டங்களுடன் இணைப்பதற்கான காலக் கெடுவை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் இணைப்பு தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்த விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் திட்டங்களின் பயனைப் பெறுவதற்கான ஆதார் எண் இணைப்பு காலக் கெடுவை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. இதை அடுத்து, ஆதார் எண் தொடர்பான மனுக்களை பின்னர் விசாரிக்கிறோம் என்று, நீதிபதிகள் அமர்வு கூறியது.
முன்னதாக, அக். 30ஆம் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என்று கூறியிருந்தது.