குஜராத், கர்நாடகத்திற்கு ரூ.3,063 கோடி கூடுதலாக மழை நிவாரணம்.. தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட தராத மத்திய அரசு!

By manimegalai aFirst Published Dec 31, 2021, 11:24 AM IST
Highlights

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக நிதி வழங்குமாறு முதலமைச்சர் 4 முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக நிதி வழங்குமாறு முதலமைச்சர் 4 முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

கொரோனா பேரலையுடன் நடப்பாண்டில் மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களும் இந்தியாவை வெகுவாக பாதித்தது. அரபிக் கடலில் உருவான தாக்டே புயல் குஜராத்தில் கரையை கடந்தபோது பெரும் சேதங்கள் ஏற்பட்டன. புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக பார்வையிட்டார். மேலும் குஜராத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியது. இதையடுத்து உருவான யாஸ் புயல் மேற்கு வங்க மாநிலத்தை தாக்கியது. அங்கு தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில்கொண்டு மேற்கு வங்க மாநிலத்திற்கும் மத்திய அரசு உடனடியாக 300 கோடி ரூபாய் நிதியை வழங்கியது.

இதேபோல் வருடம் முழுவதும் தொடர்ந்த பெருமழையால் கேரளா உருக்குலைந்தது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடாகா, அசாம் ஆகிய மாநிலங்களும் பாதிப்புகளை சந்தித்தன. பல மாநிலங்களில் நிலச்சரிவு, பெரும் வெள்ளத்தால் உயிரிழப்புகளும் பதிவாகியது. இந்த மாநிலங்களுக்கு எல்லாம் மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு நிதி வழங்கியது.

இந்தநிலையில் தான் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரு வாரம் தொடர்ந்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. பல சாலைகள் தண்ணீரில் மூழ்கின. முக்கிய நகர்களிலும் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தன. சென்னையோடு மட்டும் நிறுத்திவிடாமல் கடலோர மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் பருவமழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள குமரியில் தொடர் மழையால் ஏராளமான சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தமிழ்நாட்டை கனமழை புரட்டிப்போட்ட போது உடனடியாக ஆறுதல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். சென்னையின் புறநகர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் ஊர்களுக்குள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள் சேதமடைந்தன. பல ஊர்களில் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. வேளாண் துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு ரூ.6,230 கோடி நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்தியக் குழுவும் நேரில் ஆய்வு நடத்திச் சென்றுள்ளது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்காமல் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பாத திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரியை பெறக்கூட மத்திய அரசிடம் பிச்சை எடுப்பது போல் நிற்கவேண்டிய நிலை இருப்பதாக சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய உடனடியாக நிதி வழங்குமாறு பிரதம நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான்காவது முறையாக கடிதம் எழுதினார். அதில், ஏற்கெனவே மூன்று முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்த பதிலும் தெரிவிக்கவிலை என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தநிலையில் நடப்பாண்டில் கனமழை, வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயை கூட ஒதுக்கீடு செய்யவில்லை.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கெனவே ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்ட குஜராத்திற்கு தற்போது ரூ.1,133.35 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திற்கு யாஸ் புயல் பாதிப்புக்கு கூடுதலாக ரூ.586.59 கோடியும், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கூடுதலாக ரூ.51.33 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவிற்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி, உத்தராகண்டிற்கு ரூ.187.18 கோடியும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.3,063.21 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்குடன் செயல்படுவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.

click me!