உக்ரைனிலிருந்து வருவோருக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு... அறிவித்தது மத்திய அரசு!!

By Narendran SFirst Published Feb 28, 2022, 5:41 PM IST
Highlights

உக்ரைனிலிருந்து வரும் இந்தியர்களுக்கு சில விலக்குகளை சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

உக்ரைனிலிருந்து வரும் இந்தியர்களுக்கு சில விலக்குகளை சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் தொடர்ந்து 5வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. வான், தரை என பல்வேறு முனைகளிலிருந்து ரஷ்யா தாக்குதலை தொடர்கிறது. முக்கிய நகரங்களில் குண்டு மழை பொழிந்த வண்ணமே இருக்கிறது. போர் சூழலால் அங்கே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதை அடுத்து ஆபரேசன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசும் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷனை தொடங்கியுள்ளது. உக்ரைனில் வான்வழி மூடப்பட்டிருப்பதால் அதன் அண்டை நாடுகளான மால்டோவா, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகள் வழியாகவே மீட்புப் பணி நடைபெறுகிறது.

உக்ரைனிலிருந்து தரை வழியாகவோ ரயில் வழியாகவோ இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறாக 5 விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த வேகம் பத்தாது என்பதால் நான்கு மத்திய அமைச்சர்களை மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இச்சூழலில் உக்ரைனிலிருந்து வரும் இந்தியர்களுக்கு சில விலக்குகளை சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுவாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கட்டாய பரிசோதனை, ஏர்-சுவிதா இணையப் பக்கத்தில் விமானப் பயணத்திற்கு முன் நெகட்டிவ் பரிசோதனை அறிக்கை சமர்பிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆனால் உக்ரைனிலிருந்து  வருவோருக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பவர்கள் இந்தியாவில் விமான நிலையத்திற்கு வந்தபின் அடுத்த 14 நாட்களுக்கு தங்களின் உடல்நிலையை அவர்களே கண்காணித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு, வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.  2 டோஸ் போடாதவர்கள், நெகட்டிவ் சான்றிதழ் சமர்பிக்காதவர்கள் அவர்களின் ரத்த மாதிரிகளை கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்லலாம். ஒருவேளை அவர்களுக்கு தொற்று இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

click me!