அச்சுறுத்தும் தக்காளி காய்ச்சல்… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்!!

By Narendran SFirst Published Aug 23, 2022, 11:41 PM IST
Highlights

தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறை மற்றும் ஆலோசனைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறை மற்றும் ஆலோசனைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த மே 6ம் தேதி தக்காளி காய்ச்சலான முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 26ம் தேதி நிலவரப்படி ஐந்து வயதுக்குட்பட்ட 82க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்பின் தாக்கம் கேரள மாநிலத்தின் அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உஷார் நிலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 1-9 வயதுடைய 26 குழந்தைகள் ஓடிசா மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மட்டுமே இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்தில் இருந்தும் இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: பாக். மீது தற்செயலாக ஏவுகணை வீச்சு… இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர் டிஸ்மிஸ்!!

மேலும், இத்தகைய தொற்றுக்கு முதன்மையான அறிகுறிகள் காய்ச்சல், தோள்களில் தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வலிகள் ஏற்படும்; இதேபோல் உடல் சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நீர் போக்கு, மூட்டுகளில் வீக்கம், உடல் வலிகள் உள்ளிட்டவையும் அறிகுறிகளாக காணப்படும். அறிகுறிகள் தென்பட்டதற்கு பிறகு காய்ச்சல் ஏற்படும் எனவும் காய்ச்சல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு பிறகு தோள்களில் சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றி பின்னர் அவை கொப்பளமாகவும் புண்களாகவும் மாறும் தன்மை கொண்டது. இத்தகைய புண்கள் நாக்கு பகுதிகள், ஈறுகள், கன்னங்களின் உட்புறம் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்காளி காய்ச்சலுக்கான தொற்று அறிகுறிகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும், மற்ற குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது தோள்களில் தடிப்புகள் உள்ள குழந்தைகளை தொடவோ அல்லது கட்டிப் பிடிக்கவோ கூடாது என குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இதையும் படிங்க: குண்டும் குழியுமான சாலையால் பலியானவர்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? அதிர்ச்சி தரும் மத்திய அரசின் ரிப்போர்ட்!!

உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு இருந்தால் அதனை தொட்டவோ அல்லது சொறியவோ கூடாது; அப்படி செய்தால் அதற்குப் பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும், உடல் சோர்வையும், தோல் வெடிப்பையும் தவிர்க்க பால் நீர் மற்றும் குளிர்பானங்கள் அதிக அளவில் குழந்தைகளை உட்கொள்ள செய்ய வேண்டும், படுக்கைகள், பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் இதர பொருட்களை அவ்வபோது சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும், தக்காளி காய்ச்சலை குணப்படுத்த இப்போது வரை மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் இல்லை என்ற காரணத்தினால் சரியான தூக்கம் மற்றும் ஓய்வு எடுத்தலே நோயை குணப்படுத்துவதற்கான முக்கிய காரணியாகும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை மற்றும் ஆலோசனை அடங்கிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!