
நீட் நுழைவுத் தேர்வை இனி ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்றும் இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வின்போது, மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுடனே அவர்கள் தேர்வெழுதினர்.
நீட் தேர்வு முடிவுகளால் இந்த ஆண்டு மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன.
மொழிபெயர்ப்பில் பிழை, தேர்வு முடிவுக்கு முந்தைய பிந்தைய மாணவர்கள் எண்ணிக்கையில் மாற்றம். தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையம். தேர்வு முடிவு வெளியானதில் குழப்பம் என பல்வேறு பிரச்சனைகள் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த நிலையில், நீட் தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முனையம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை நடந்ததுபோல் அல்லாமல், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு, ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.