
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் அல்லது சிவாஜி மகால் என மாற்ற வேண்டும் என்று உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் அவருக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம், பைரியா சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங். இவர் கூறும் கருத்துக்களால் சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்வார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு அதிகாரிகளைவிட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோமேல் என்றும் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேலையை சரியாக செய்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு உருவாகியிருந்தது.
இந்த நிலையில், உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று இவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்ஏ சுரேந்தர் சிங், இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றார்.
அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அந்த வகையில் தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் அல்லது சிவாஜி மகால் என்று மாற்ற வேண்டும் என்று கூறினார். பாஜக எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங்கின் இந்த கருத்துக்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.