
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகளை சி.பி.எஸ்.இ. நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
உச்சநீதிமன்றமும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.
11 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை ஜுன் மாதம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ”நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படவில்லை. ஒரே மாதிரியான வினாக்கள், அனைத்து வினாத்தாள்களிலும் இடம்பெறவில்லை என்பதால் இதனை பொது நுழைவுத் தேர்வாக கருத முடியாது என்றும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் 12 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.