டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு மறுசீரமைப்பில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் எண்-6, பிளாக் ஸ்டாப் சாலையிலிருக்கும், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளது. ஷீஷ் மஹால் என்றழைக்கப்படும் இந்த பங்களாவில்தான் கடந்த 2015ஆம் ஆண்டில் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வசித்து வருகிறார்.
சுமார் 54 ஆயிரம் சதுர அடியில் பரந்து விரிந்த இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணி நடந்தது. இதில் சுமார் ரூ.45 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு மறுசீரமைப்பில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய குடியிருப்பு கட்டியதில் டெண்டர் மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோஷிமத்தில் 65 சதவீத வீடுகள் பாதிப்பு: அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
டெல்லி அரசின் அறியப்படாத அதிகாரிகள் மீது முதற்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணையில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்யும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு டெல்லி அரசின் கீழ் உள்ள பொதுப்பணித்துறைக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா கடந்த மே மாதம் சிபிஐ இயக்குனருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தின் அடிப்படையில், இதுகுறித்து டெல்லி தலைமைச் செயலாளர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு, வெளிச்சத்துக்கு வந்த முறைகேடுகள் குறித்த அனைத்து அம்சங்களையும் சிபிஐ விசாரிக்கும் என தெரிகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) சிறப்பு தணிக்கைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.