ஜோஷிமத்தில் உள்ள 65 சதவீத வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு நிறுவனங்களின் அறிக்கை கூறுகிறது
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.
நிலம் சரிவு பல ஆண்டுகளாக கவனிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி 2 முதல் ஜனவரி 8 வரை அதிகரித்து வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், ஜோஷிமத்தில் பேரழிவுக்குப் பிந்தைய மதிப்பீட்டை 35 பேர் கொண்ட குழுவானது, ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 25 வரை மேற்கொண்டது. அக்குழுவில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ஐ.நா. ஏஜென்சிகள், மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அக்குழுவின் அறிக்கையின்படி, ஜோஷிமத்தில் மொத்தமுள்ள 2,152 வீடுகளில் 1,403 வீடுகள் நிலம் சரிந்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜோஷிமத்தில் உள்ள 65 சதவீத வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
“மொத்தம் 472 வீடுகள் புனரமைக்கப்பட வேண்டும் மற்றும் 931 வீடுகள் பழுது நீக்க அல்லது புதுப்பிக்கப்பட வேண்டும். நிலச்சரிவுகள் மட்டுமின்றி, பிற பேரிடர்களுக்கும் எதிராக, பகுதியளவு சேதமடைந்த வீடுகளை, சிறந்த முறையில் கட்டியெழுப்ப மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.
ஜோஷிமத்தில் உள்ள கட்டிடங்கள் சேதமடைவதற்கான முக்கிய காரணங்களாக, பலவீனமான கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு, போதுமான வலுவூட்டல் இல்லாமல் கட்டப்பட்டது, கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் செங்குத்தான சரிவுகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டது ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சில கட்டிடங்களில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (RC) அல்லது மரத்தாலான பட்டைகள் போன்ற வலுவான ஆதரவு கட்டமைப்புகள் இல்லை எனவும், பலவீனமாக கட்டப்பட்டதால் சிறிய நிலத்தடி சரிவு ஏற்பட்டாலும் கூட, கட்டிடங்கள் அதிக சேதத்தை சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!
மேலும், மழைக்காலம் முடியும் வரை நகரத்தில் புதிய கட்டுமானப் பணிகளை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும், பருவமழைக்குப் பிந்தைய நில நிலைமைகளை மறுமதிப்பீடு செய்த பிறகு, இலகுரக கட்டமைப்புகளுக்கு மட்டும் தளர்வு அளிக்க வேண்டும் என்றும் மாநில அரசை அக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பான ஜோஷிமத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு வருங்காலத் திட்டத்தை உருவாக்குவதற்கான உடனடித் தேவையையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, “ஜோஷிமத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பேரிடர் திடீரென ஏற்பட்டதல்ல. அவை நீண்டகாலமாக நிகழ்ந்து வந்ததின் வெளிப்பாடுதான். இதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று, இந்த நகரம், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்று வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி இயக்குநர் கலாசந்த் சைன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.