இடைத்தேர்தல் முடிவுகள்: புதுப்பள்ளியில் காங்கிரஸ் முன்னிலை!

By Manikanda Prabu  |  First Published Sep 8, 2023, 1:25 PM IST

நாடு முழுவதும் நடைபெற்ற 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன


திரிபுரா மாநிலம் தன்பூர் மற்றும் போக்ஸாநகர், கேரள மாநிலம் புதுப்பள்ளி, ஜார்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்க மாநிலம் துப்குரி, உத்தரப்பிரதேச மாநிலம் கோசி, உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் என மொத்தம் ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.

அதில், பதிவான வாக்குகள் செப்டம்பர் 8ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவான பின்னர் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் முடிவு என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

அந்த வகையில், கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த உம்மன் சாண்டி. கேரள முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி காலமானதையடுத்து, அவரது புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

உம்மன் சாண்டியின் கோட்டையான புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி, கேரள மாநிலம் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பளர் சாண்டி உம்மன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 31,658 வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் 4,278 வாக்குகளை பெற்றுள்ளார்.

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு! எந்தெந்த நாட்டு தலைவர்கள் வரப்போகிறார்கள் தெரியுமா.? முழு விபரம்

மேற்கு வங்கத்தின் துப்குரி தொகுதியில் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. அதில் பெற்ற வாக்குகளின்படி, பாஜக வேட்பாளர் தாப்ஸி ராய் 1,085 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஈஷ்வர் சந்திர ராய் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

உத்தரகாண்டின் பாகேஷ்வர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரை விட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் வேட்பாளர் 1,551 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திரிபுராவில் பாஜக வேட்பாளரும், உத்தரப்பிரதேசம் கோசி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் கோசி தொகுதியிலும், ஜார்கண்டின் டும்ரி, தன்பூர், திரிபுராவின் போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஐக்கிய முன்னணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தின் துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளியிலும் ஒருவருக்கொருவர் எதிரணியில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!