
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை இழந்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் ஒரு மாநிலத்தில் தனது ஆதிக்கத்தின் பிடியை தளர்த்தியுள்ளது.
இதன் மூலம் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி சந்திக்கும் இரு மிகப்பெரிய தோல்விகள் இதுவாகும்.
கடந்த 1984ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதே அளவுக்கு மிகப்பெரிய தோல்வியை கடந்த 2014ம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்தது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபின், அந்த அனுதாபஅலையால், காங்கிரஸ் கட்சி 415 இடங்களில் அபார வெற்றி பெற்று நாட்டு மக்களின் 48 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியது. ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் அதாவது 2014ம் ஆண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில், வெறும் 44 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது காங்கிரஸ் கட்சியி எப்போதும் சந்திக்காத மிக மோசமான தோல்வியாக அமைந்தது.
2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தோல்வி அதோடு முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இன்னும் தொடர்ந்து வருவது மிகவும் வருத்தப்படக் கூடியதாகும்.
பல மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்தும், முடியாமல் ஆட்சியை இழந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் பஞ்சாப் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இல்லாமல் கட்சி பிற கட்சியிடம் இருந்து அதிகாரத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இப்போது 29 மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியை நடத்துகிறது. கர்நாடகம், மிசோரம், மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களாகும். அதேசமயம், பா.ஜனதா கட்சி, 14 மாநிலங்களிலும், கூட்டணியுடன் 5 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலுக்கு பின், நடந்த 18 மாநில தேர்தல்களில் பா.ஜனதா கட்சி 11 மாநிலங்களில் ஆட்சியை கோலோச்சியுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் மட்டுமே வென்றுள்ளது.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம், தெலங்கானா, ஆந்திரா எனப் பிரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டபின் நடந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், சில மாதங்களில் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம், கூட்டணியில் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பா.ஜனதாவின் சதிவலையால் பலர் அணி மாறினர். இந்த மாநிலத்திலும் கடைசியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், அரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் துடிப்புடன் செயலாற்ற முடியாமல், தோல்வியைத் தழுவியது. இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது.
இதில் ஹரியானா மாநிலத்தில் நேரடியாக ஆட்சியிலும், மற்ற 3 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்தும் காங்கிரஸ் கட்சியால் தனது அதிகாரத்தை தக்கவைக்க முடியவில்லை.
அதேசமயம், காங்கிரஸ் இழந்த மாநிலங்களில் எல்லாம் பா.ஜனதா கட்சி கூட்டணியுடன் ஆட்சியில் அமரத் தொடங்கியது. ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தனிஆட்சியையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பி.டி.பி.கட்சியுடன் இணைந்து பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது.
கடந்த 2015ம் ஆண்டு பீகார், டெல்லி மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. டெல்லியில் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால், சிறிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் விஸ்வரூப வளர்ச்சியின் முன், ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. பா.ஜனதா 3 இடங்களில் வென்றது.
பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இந்த கூட்டணிக்கு மக்கள் அபார வரவேற்பைக் கொடுத்து ஆட்சியில் அமரவைத்தனர்.
ஆனால், முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் கூட்டணியை உடைத்து, பா.ஜனதா துணையுடன் ஆட்சி அமைத்தார். இதனால், இந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் தனது பங்களிப்பை பறிகொடுத்து எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டில் நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிடமும், அசாம் மாநிலத்தில் பா.ஜனதா கட்சியிடமும் ஆட்சியை இழந்தது காங்கிரஸ் கட்சி.
தமிழகத்தில் தி.மு.க. கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சி சட்டசபைத்தேர்தலில் போட்டியிட்ட போதிலும், அதிகமான இழப்புகளைச் சந்திக்கவில்லை. இங்கு அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்தது.
மேற்கு வங்காள மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்ற , கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது. ஆனால், இந்த கூட்டணி தோல்விக் கூட்டணி என்பதை நிரூபித்து, மம்தா பானர்ஜி 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே வரலாற்று வெற்றி அடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அதேசமயம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பா.ஜனதாவிடம் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ். கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தபோதிலும், ஆட்சி அமைக்க போதுமான அளவு கூட்டணி அமையாததால், ஆட்சியை இழந்தது. ஆனால், இந்த இரு மாநிலங்களிலும் தனது சாதுர்யத்தால், பா.ஜனதா ஆட்சி அமைத்தது.
இந்த ஆண்டின் கடைசி கட்டமாக குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் மீண்டும் காங்கிரஸ் கட்சி கோட்டை விட்டுள்ளது. தான் ஆட்சியில் இருந்த இமாச்சலப் பிரதேசத்தில் அதிகாரத்தை இழந்து, பா.ஜனதாவிடம் மீண்டும் தோற்றுள்ளது. குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டி நடந்த உச்ச கட்டபோரில் பா.ஜனதாவிடம் போராடி காங்கிரஸ் தோற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் 2014ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி மேல் தோல்வியாக கிடைத்து வருகிறது.